4ஆவது லீக் போட்டியும் மழையால் கைவிடப்பட்டது – இந்திய, நியூ. அணிகளுக்கு தலா ஒரு புள்ளி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கிண்ண லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டதால், ரவுண்ட் ரோபின் சுற்றில் இதுவரையான 18 லீக் போட்டிகளில் 4 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் 12வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ‘ரவுண்ட் ரோபின்’ முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன.

இன்று நாட்டிங்காமில் நடக்கவிருந்த 18ஆவது லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவிருந்தன. நேற்றிரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது.

‘சூப்பர்சோனிக்’ உதவியால் மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்தன. இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் லேசான துாறல் ஆரம்பமானது. இதனால் நாணயச்சுழற்சி கூட போடாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

இந்த போட்டி கைவிடப்பட்டதால் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்த நியூசிலாந்து அணி இன்றைய ஒரு புள்ளியுடன் மொத்தம் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திலிருந்த இந்திய அணி இன்றைய ஒரு புள்ளியுடன் மொத்தம் 5 புள்ளிகளுடன் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!