ஆரம்பம் அசத்தல்;நடுத்தர வரிசை சொதப்பல் – ஆஸியிடம் வீழ்ந்தது இலங்கை

0
18

முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்த போதும் நடுத்தர வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது.
ஐ.சி.சி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சனிக்கிழமை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணிக்கு அணித்தலைவர் பின்ச் சதமடிக்க 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களையிழந்து 334 ஓட்டங்களைக் குவித்தது.

சூப்பர் ஆரம்பம்
பதிலுக்கு 50 ஓவர்களில் 335 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, குசால் பெரேரா ஜோடி சிறப்பான ஆரம்பத்தை வழங்கியது.

இந்த ஜோடி வெற்றிக்குத் தேவையான ஓட்ட சராசரி இலக்கு வைத்து அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி முதல் 10 ஓவர்களான பவர் பிளேயில் (Power Play Overs) 87 ஓட்டங்களை குவித்தது. அதனால் இந்த உலகக் கிண்ணத் தொடர்பில் முதலாவது பவர் பிளேயில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற பெருமையை இலங்கை பெற்றது.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 43 பந்துகளில் அரைச்சதத்தை இலங்கை அணி 12.4 ஓவர்களில் 100 ஓட்டங்ளை எட்டியது. எட்ட மறுமுனையில் குசால் பெரேரா 33 பந்துகளில் அரைச்சதம் கடந்து அசத்தினார்.

இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 15.3 ஓவர்களில் 115 ஓட்டங்களை எடுத்த போது குசால் பெரேரா 36 பந்துகளில் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிமன்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து குசால் மென்டிஸ் களமிறங்க மறுமுனையில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன அதிரடியால் தனது முதலாவது சதத்தை நோக்கி ஆடினார்.

எனினும் துரஷ்டவசமாக திமுத் கருணாரத்ன 108 பந்துகளில் 97 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரிட்சட்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து கன்னிச்சதத்தை எட்டும் வாய்ப்பையிழந்தார்.
அடுத்து வந்த மத்யூஸ் 9 ஓட்டங்களுடன் கம்மின்சின் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறிவர்த்தன 3, திசார பெரேரா 7 ஓட்டங்கள் சிறப்பாக ஆடிய குசால் மென்டிஸ் 30 ஓட்டங்கள் என ஸ்ராக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணி 6 ஓவர்களில் 36 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட்டுக்களையிழந்தது.

இறுதியில் இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களை மாத்திரமெடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.
தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களை எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸ்ராக் 4 விக்கெட்டுக்களையும் ரிட்சட்சன் 3, கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
90களில் ஆட்டமிழப்பு நீடிப்பு

இலங்கை அணியின் வீரர்கள் உலகக் கிண்ண போட்டிகளில் 90 தொடக்கம் 99 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து சதம் பெறும் வாய்ப்பை நழுவவிடுவது இது முதன்முறையில்லை. அரவிந்த டி சில்வா 1996 மற்றும் 2003 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் குமார் சங்கக்கார 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் 90ஓட்டங்களில் ஆட்டமிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.