பின்ச் அபார சதம்; இலங்கைக்கு 335 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆஸி.

0
23

ஆரோஷ் பின்ச்சின் அபார சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணிக்கு 335 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஐ.சி.சி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சனிக்கிழமை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணிக்கு அணித்தலைவர் பின்ச், வோர்னர் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்தது. பின்ச் ஓரளவு அதிரடியாக ஆடி அரைச்சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய 26 ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வாவிடம் வீழ்ந்தார்.

அடுத்து வந்த ஹவாய அதிரடியாக முற்பட்டு 10 ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்களை ஆஸ்திரேலிய அணி இழந்த போதும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய அணித்தலைவர் பின்ச் அரைச்சதம் கடந்து நம்பிக்கையளித்தார். அவருடன் நம்பிக்கை நட்சத்திரம் சிமித் இணைந்தார்.

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ஓட்ட சராசரி எகிறியது. அணித்தலைவர் பின்ச் 97 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் சிமித்தும் தனது பங்குக்கு அரைச்சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி 40.4 ஓவர்களில் 250 ஓட்டங்களை எட்டியது.

அதிரடியாக ஆடிய ஆரோஷ் பின்ச் 132 பந்துகளில் 5 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் உள்பட 153 ஓட்டங்களை எடுத்து உதானவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய சிமித் 59 பந்துகளில் 73 ஓட்டங்களை எடுத்த வேளை மலிங்கவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மக்ஸ்வெல் வான வேடிக்கை காட்ட ஆஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை எட்டியது.

ஷோன் மார்ஷை 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார் இசுறு உதான. அடுத்து வந்த ஹரே 4, கம்மின்ஸ் (0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்து ரன்-அவுட் செய்தார் உதான. ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களையிழந்து 334 ஓட்டங்களை எடுத்தது.

மக்ஸ்வெல் 25 பந்துகளில் 46 ஓட்டங்களுடனும் ஸ்ராக் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா, இசுறு உதான இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் மலிங்க ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இலங்கை அணிக்கு 50 ஓவர்களில் 335 ஓட்டங்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.