விபத்தில் உயிரிழந்த இளைஞனை பெற்றோர் அடையாளம் காட்டினர்

0
22

விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞரை அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர்.

கொக்குவில் கிழக்கு சேர்ச் லேனைச் சேர்ந்த தர்மானந்தசிவம் நித்திலன் (வயது-19) என்பவரே உயிரிழந்தார் என்று அவரது தந்தை தர்மானந்தசிவம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காட்டினார்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் 19 வயதுடைய இளைஞர் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவர், தகவல் எதனையும் வழங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

படுகாயமடைந்த இளைஞர், முழுமையான சுயநினைவற்ற நிலையில் தனது பெயரை மித்திரன் எனத் தெரிவித்துள்ளார். அவர் சத்திரசிகிச்சைக்காக சத்திரசிகிச்சை கூடத்துக்குக் கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.

அவரை அடையாளம் காணுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்து மகனின் சடலத்தை அடையாளம் காட்டினர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், வேகக் கட்டுப்பாட்டையிழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று இறப்பு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை தந்தையாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.