ஆமை வேகத்தில் ஆடி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

0
18

உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 125 ஓட்டங்களுக்குச் சுருட்டிய தென்னாபிரிக்க அணி, அடித்து நொறுக்க வேண்டிய இலக்கை ஆமைவேகத்தில் விரட்டி 28.4 ஒவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மொத்தத்தில் இந்த ஆட்டம் எப்படி இருந்தது என்றால் ஆப்கானிஸ்தான் அணி ஒரு டி20 போட்டியில் ஆடுவது போலவும், தென்னாபிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுவது போலவும் இருந்தது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கார்டிப்பில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்க, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா முதலில் ஆப்கானிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அந்த அணி சுமாரான தொடக்கம் கண்டது. ஆனால் இடையிடையே மழையால் ஆட்டம் தடைபட்டதால் தொடக்க வீரர்கள் தங்கள் உத்வேகத்தை இழந்தனர்.

56 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையிலிருந்து அடுத்த 69 ஓட்டங்களுக்கு இம்ரான் தாஹிர், பெலுக்வயோ, கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இந்த 69 ஓட்டங்களில் ரஷீத் கான் மிகப்பிரமாதமாக துடுப்பெடுத்தாடி 25 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும் பெலுக்வயோ 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோரிஸ் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தென்னாபிரிக்க அணிக்க்கு டக் வேத் லூயிஸ் முறைப்படி மாற்றம் செய்யப்பட்ட ஓட்டங்கள் 48 ஓவர்களில் 127 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

குவிண்டன் டி கொக் 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்து அணித்தலைவர் குல்பதின் நயீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஹஷிம் அம்லா துடுப்பாட்ட மறதியில் இருக்கிறார் போல் தெரிகிறது. 83 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களை எடுத்து ஹசிம் ஆம்லா வெறுப்பேற்றினார். ஆனால் அவருக்கே வேதனை தரும் ஒரு இன்னிங்ஸாகவே இது அமைந்தது.

இறுதியில் தென்னாபிரிக்க அணி 28.4 ஒவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க அணி முதலாவது வெற்றியைப் பெற்று 9வது இடத்திலிருந்து 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக வென்று கையைக் கட்டிக் கொண்டு மற்ற அணிகளின் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.