இலங்கை அணிக்கு தடை?-ஐசிசி காட்டம்: ஒரேமாதிரி நடத்துங்கள், ஆடுகளம் விவகாரத்தை கிளப்பி சர்ச்சை

0
21

உலகக் கிண்ண லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 87 ஓட்டங்களால் தோல்வி அடைந்தபின், பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல், உதாசீனப்படுத்திவிட்டுச் சென்ற இலங்கை அணி மீது தடைவிதிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஆலோசித்து வருகிறது.

ஐசிசி விதிமுறையின்படி, போட்டி முடிந்தபின் வெற்றி பெற்ற அணியும், தோல்வி அடைந்த அணியும் ஊடகங்களைச் சந்தித்து பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இந்த விதிமுறையை மீறிய இலங்கை அணி, நேற்று போட்டி முடிந்தபின் அனைத்து வீரர்களும் ஊடகத்தினரைச் சந்திக்காமல் சென்றுவிட்டனர். ஊடகத்தினர் கேட்டபோதும் அதுகுறித்து பதில் அளிக்காமல் உதாசீனப்படுத்திச் சென்றனர்.

இது ஐசிசி விதிமுறையின்படி ஒழுக்கக்கேடானது, விதிமுறைமீறல் என்பதால் இலங்கை அணிக்கு தடைவிதிப்பது குறித்து ஐசிசி ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து ஐசிசி செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், ” ஐசிசி விதிமுறையின்படி, போட்டி முடிந்தபின் தோற்ற அணியும், வெற்றி பெற்ற அணியும் ஊடகங்களைச் சந்தித்து பேட்டி கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறியது இலங்கை அணியின் தவறாகும். இந்த தவறுக்கு நிச்சயம் இலங்கை அணிக்கு தண்டனை உண்டு. அதிகபட்சமாக தடை விதிக்கக்கூடிய அனைத்து முகாந்திரங்களும் இருக்கின்றன. விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கை அணியின் முகாமையாளர் அசந்தா டி மெல், ஐசிசி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் 10 அணிகளையும் சமமாக நடத்த வேண்டியது ஐசிசியின் பொறுப்பாகும். ஆனால், ஒவ்வொரு அணியையும் அவர்களின் தரத்துக்கு ஏற்ப நடத்துவது மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது.

இலங்கை அணிக்கு ஒருவகையான ஆடுகளத்தையும், மற்ற அணிகளுக்கு ஒரு வகையான ஆடுகளத்தையும ஐசிசி அமைக்கிறது. அதுமட்டுமல்லாமல் போதுமான பயிற்சி வசதி இல்லை, போக்குவரத்து வசதி கிடையாது, உலகத்தரத்தில் விளையாடும் அணிகளுக்கு தங்கும் வசதி கூட மோசமான நிலையில் இருக்கிறது.

இலங்கை போன்ற சிறிய அணிகளுக்கு சாதாரணப் பேருந்து, மற்ற அணிகளுக்கு டபுள்டெக்கர் சொகுசு பேருந்து. ஹோட்டலில் தங்கும் வசதியும் முறையாக இல்லை, வீரர்களுக்கான நீச்சல் குளம் இல்லை” என காட்டமாக விமர்சித்துள்ளார்.