ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு ஜூலையில் தீர்வு – ரூபா 2,800 முதல் 20,000 வரை அதிகரிப்பு

0
14

ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய முரண்பாடுகளை அடுத்த மாதத்திலிருந்து நீக்கவுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் நிதி அமைச்சு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2015 ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான கொடுப்பனவு குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 800 ரூபா முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக உதவியாளர் முதலாம் தரத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 2 ஆயிரத்து 800 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

முகாமைத்துவ உதவியாளர் முதலாம் தரத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான கொடுப்பனவு 5 ஆயிரத்து 200 ரூபாவால் உயர்வடையும்.

ஆசிரியர் சேவையில் முதலாம் தரத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 9 ஆயிரத்து 200 ரூபாவாலும் தாதியர் சேவை முதலாம் தரத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 7 ஆயிரத்து 100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருக்கான ஓய்வூதியம் 4 ஆயிரத்து 200 ரூபாவால் அதிகரிக்கவுள்ளது.

ஓய்வுபெற்ற மூத்த நிறைவேற்று அதிகாரிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு 16 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், 2015 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர்களுக்கான கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஓய்வூதிய திருத்தத்துடன் ஐந்து, 2,015 சுற்றறிக்கைக்கு அமைய 2016ஆம் ஆண்டும் அதற்குப் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கும் வரை வழங்கப்பட்ட 3 ஆயிரம் 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதுடன் 3 ஆயிரத்து 525 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தொடர்ந்தும் கிடைக்கவுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிப்பதற்காக அரசு 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 12 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது – என்றுள்ளது.