ரோகித் சதம் – இந்தியா வெற்றி; பாகிஸ்தான் சொதப்பல்

0
16

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி டக் வேத் லூயிஸ் முறையில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர் நகரில் இன்று நடந்த 22ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்திய அணியில் காயத்தால் விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக தமிழக சகல துறைவீரர் விஜய் சங்கர் தேர்வானார். பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம், ஷதாப் கான் இடம் பிடித்தனர். நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அகமட், களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

ரோகித் சதம்

இந்திய அணிக்கு ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் ஆரம்ப வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கினார். இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் சேர்த்தபோது, அரை சதம் அடித்த ராகுல் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எதிரணி பந்துவீச்சை சிதறடித்த ரோகித் 140 ஓட்டங்கள் எடுத்து தொடரில் இரண்டாவது சதம் விளாசினார். அமீர் ‘வேகத்தில்’ பாண்ட்யா 26 ஓட்டங்களுடன் சிக்கினார். தோனி ஒரு ஓட்டத்துடன் திரும்பினார்.

சிறப்பாக செயல்பட்ட கோலி அரை சதம் எட்டினார். மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. மீண்டும் ஆரம்பமாகிய போட்டியில், அமீர் பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் கோலி 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 336 ஓட்டங்கள் எடுத்தது. விஜய் சங்கர் (15), ஜாதவ் (9) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

புவனேஷ்வர் குமார் விலகல்
2.4 ஓவர்கள் மட்டுமே வீசிய இந்திய வீரர் புவனேஷ்குமார் காயம் காரணமாக உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகினார். இந்திய தரப்பில் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

302 ஓட்டங்கள் இலக்கு

ஆட்டத்தின் 35 வது ஓவரில் மழை மீண்டும் குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது. மழை நின்று மீண்டும் ஆட்டம் ஆரம்பமாகிய போது டக்வொர்த் லுாயிஸ் விதிப்படி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு 302 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி டக் வேத் லூயிஸ் முறையில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் பக்கார் ஸாமன் 62 ஓட்டங்களையும் பாபர் அசாம் 48 ஓட்டங்களையும் இமாட் வாசிம் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

இந்தியா சார்பில் குல்திப் ஜாதவ், பாண்டா மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக இந்திய அணியின் ரோகித் சர்மா தெரிவானார்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றதுடன் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 7 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியைப் பின்தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறியது.