வலி. தெற்கு பிரதேச வர்த்தக சங்கம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – பிரதேச செயலர் மீது குற்றச்சாட்டு

0
23

உடுவில் பிரதேச செயலக வர்த்தகர்களுக்கு என பிரதேச செயலாளரால் புதிதாக அமைக்கப்பட்ட வர்த்தக சங்கத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒரு சில வர்த்தகர்களை அழைத்து பிரதேச செயலாளரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வர்த்தக சங்கம் சட்டத்துக்குப் புறம்பான என்றும் அதனைக் கலைப்பதற்கான தீர்மாத்தை வலி. தெற்கு பிரதேச சபை நிறைவேற்றவேண்டும் என்று கோரியும் சபை உறுப்பினர் தவராஜா துவாரகன் பிரேரணை ஒன்றை தவிசாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.

வலி. தெற்கு (உடுவில்) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம், சுன்னாகம் நகரிலுள்ள வர்த்தகர்களை அழைத்து நேற்று (15) சனிக்கிழமை பிரதேச செயலாளரால் வர்த்தக சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு பிரதேச சபையால் வர்த்தக உரிமம் வழங்கப்பட்ட அனைத்து வர்த்தகர்களுக்கும் அழைப்புவிடுக்காத பிரதேச செயலர், அழைக்கப்பட்ட வர்த்தகர்கள் சிலரை வைத்து இந்த வர்த்தக சங்கம் அமைக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“பிரதேச செயலாளர் தன்னிச்சையாக அமைத்துள்ள வர்த்தக சங்கம் தொடர்பில் வலி. தெற்கு வர்த்தகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதனால் பிரதேச செயலாளரால் அமைக்கப்பட்டுள்ள சட்டத்துக்குப் புறம்பான வர்த்தக சங்கத்தைக் கலைத்துவிட்டு வலி. தேற்கு பிரதேச சபையால் வியாபார உரிமம் வழங்கப்பட்டுள்ள அனைத்து வர்த்தகர்களையும் உள்ளடக்கி புதிய வர்த்தக சங்கம் உருவாக்கப்படவேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்” என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், பிரேரணை ஒன்றை தவிசாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.