கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியோரில் ஒருவர் கைது

கொக்குவில் ரயில் நிலைய அதிபர் (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் ரயில் நிலைய அதிபர், 8 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

கொக்குவில் சந்திக்கு அண்மையாக உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் கொக்குவில் ரயில் நிலைய அதிபர் நின்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், அவரைத் தாக்கியது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவு, சந்தேகநபர்களில் ஒருவரை நேற்றிரவு கைது செய்தது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள அவரது வீட்டில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!