இலங்கைத் தமிழர்கள் 65 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

இலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.

மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பில் தெரிவித்ததாவது, “நான் இது தொடர்பாக நீதிப் பேராணை மனுதாரர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஒரு நேர்மறையான உத்தரவை வழங்கவியலாது. காரணம், இது மத்திய அரசின் செயலுரிமைப் பகுதியில் உள்ள விடயமாகும்.

மனுதாரர்களுக்காக என் இதயம் ரத்தம் சிந்தலாம் ஆனால், நீதியதிகாரத்தின் வரம்பு எனும் லஷ்மண ரேகை குறித்து நான் கவனமேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இந்த லஷ்மண ரேகை எனும் வரம்பைக் கடந்து செல்வது ஆக்கிரமிப்பாகும். ஆக்கிரமிப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அது மோசமானதே. ஆகவே நீதித்துறை அரசின் செயலுரிமை தளத்துக்குள் தலையிடுவதும் ஆக்கிரமிப்பு என்பதிலிருந்து விதிவிலக்காக முடியாது. சிலர் இதனை ஆட்சேபிக்கலாம்” என்றார்.

இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இருதரப்பினரும் மனுதாரர்கள் முறையான அனுமதி பெற்று இவர்கள் இந்தியாவுக்குள் வரவில்லை என்றும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்பதால் இந்தியக் குடியுரிமைச் சட்டாம் 1955-ன் பிரிவுகளின்படி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு தகுதியற்றவர்களாகிறார்கள் என்று வாதிட்டது.

ஆனால், மனுதாரர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 21-ம் பிரிவை அழைக்கலாம். இது குடிமக்கள், குடிமக்கள் அல்லாதோர் அனைவருக்கும் பொருந்துவதே என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மனுதாரர்கள் வம்சாவழியாக இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். நம் மொழியைப் பேசுகின்றனர். நம் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியாவை தங்கள் நிரந்தர நாடாக்கிக் கொள்ள தயாராக இருப்பவர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசும் முன்னதாக இவர்களை இலங்கைக்கு வலுக்கட்டாயமாக அனுப்ப மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 35 ஆண்டுகளாக முகாம்களில் இருந்து வந்துள்ளனர்.

மனுதாரர்களின் பெரும்பாலானோர் திருச்சி கொட்டப்பட்டு முகாமில் தற்போது தங்கியுள்ளனர். காலனியாதிக்க காலகட்டங்களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக இலங்கையில் குடியேறி ஆனவர்களின் வம்சாவளியினர் என்று மனுதாரர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

மேலும் இவர்கள் தங்களை வடக்கு, கிழக்கு மாகாண இலங்கைத் தமிழர்களாகக் கருதக் கூடாது என்றும் தாங்கள் இந்தியாவிலிருந்து சென்று காலனியாதிக்க காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த இந்திய வம்சாவளியினர். எனவே தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் கோரியுள்ளனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!