அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கின்றனர் முஸ்லிம் எம்.பிக்கள்

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிக் கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், தமது பதவிகளை ஏற்றுக் கொள்வது என இன்று தீர்மானித்துள்ளனர்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடந்தது. அதன்போதே இந்த முடிவை எடுத்ததாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி விடுத்த கோரிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அத்துடன், பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்துக் கைது செய்யப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் இதன்போது கருத்துப் பரிமாறப்பட்டது.

நாட்டின் நிலமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, வழமை நிலை திரும்பியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வகித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், பிரதி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை ஏற்றுக்கொள்வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நாடு திரும்பும் நிலையில் வரும் சனிக்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சராக இருந்த றிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலகக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் நடத்திய உணவு ஒறுப்புப் போராட்டத்தை அடுத்து, எழுந்த சூழ்நிலைகளால், அரசில் அங்கம் வகித்த முஸ்லிம்களான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் 9 பேர் கடந்த ஜூன் 03ஆம் திகதி பதவி விலகினர்.

எனினும் அவர்கள் 9 பேரில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் கடந்த 19ஆம் திகதி மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!