தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பட்டியலை கோரும் தெரிவுக்குழு

நாட்டில்   பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் திகதி, தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அங்கு காலையுணவு சாப்பிட்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வின் போது, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தா குமாரசிறி இதனை தெரிவித்தார்.

தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தும் திட்டம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டமைக்கு அங்கு தங்கிருந்தவர்கள் காரணமா? என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த விவரங்களைக் கோர தெரிவுக் குழு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள், தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை ஏன் கைவிட்டனர் என்ற கேள்விக்கான விசாரணைகளை முன்னெடுக்க இந்தப் பட்டியல் உதவும் என்றும் தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தா குமாரசிறி கூறினார்.

சர்வதேச சக்தியின் திட்டத்திலேயே
ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்றன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருக்கவில்லை என்றும், இது சர்வதேச சக்தி ஒன்றின் வேலையே எனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வில் சாட்சியளித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.

“சில நாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிடுகின்றன  என்பது பொதுவான விடயம்.

இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் அமைப்பு இருந்திருக்கும் என நான் நினைக்கவில்லை.

சில சர்வதேச சக்திகள் சஹ்ரானை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன. எனவே, தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு சர்வதேச சக்தி இருப்பதாக நான் நம்புகிறேன்.

தாஜ் சமுத்ரா விடுதியில் குண்டை வெடிக்க வைக்க வந்தவர் அங்கு தாக்குதல் நடத்தாமல் சென்றதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த நேரத்தில் தாஜ் சமுத்ரா விடுதியில் இருந்தது யார் என்பதைக் கண்டறிவது ஒன்றும் கடினமான விடயம் அல்ல.

தற்கொலைக் குண்டை வெடிக்கவைக்கும் கருவி இயங்கவில்லையா  அல்லது அந்த நேரத்தில் விடுதியில்  ‘குறிப்பிட்ட நபர்கள்’ இருப்பதால், கருவியை இயக்க வேண்டாம் என்று குண்டுவெடிப்பாளருக்கு அவரது மேலிடத்தில் இருந்து  ஏதேனும் உத்தரவு கிடைத்ததா என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினம் விடயம் அல்ல.

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் குண்டு வெடிக்கப்படாமல், காப்பாற்றப்பட்டதாக நான் சந்தேகிக்கிறேன் என்று மட்டுமே நான் கூறினேன்.

அங்கு யார் இருந்தார்கள் என்பது பற்றிய எந்த விவரங்களும் எனக்குத் தெரியாது. தாக்குதல் நடத்தியவர்கள் தாஜ் நட்சத்திர விடுதியை ஏன் காப்பாற்றினார்கள் என்பதை பாதுகாப்பு அமைப்புகளோ அல்லது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவோ தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!