உலகக் கிண்ணம் வென்ற 6ஆவது அணி இங்கிலாந்து

உலகக் கிண்ணம் வென்ற 6ஆவது அணி என்ற பெருமை பெற்றது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணி, முதன்முறையாக உலகக் கிண்ணம் வென்றது. இதன்மூலம் உலக சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 6ஆவது அணியானது. ஏற்கனவே ஆஸ்திரேலியா (1987, 1999, 2003, 2007, 2015), இந்தியா (1983, 2011), மேற்கிந்தியத் தீவுகள் (1975, 1979), பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) அணிகள் உலகக் கிண்ணம் வென்றிருந்தன.

இரண்டாவது அணி

லீக் சுற்றில் 3 தோல்வியை சந்தித்து உலகக் கிண்ணம் வென்ற 2ஆவது அணியானது இங்கிலாந்து. ஏற்கனவே 1992ல் பாகிஸ்தான் அணி, 3 லீக் போட்டியில் தோல்வியடைந்து, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனானது.

முதன்முறை

உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது.

  • இது, உலகக் கிண்ண அரங்கில் சமநிலையான 5வது போட்டி. ஏற்கனவே ஆஸ்திரேலியா–தென்னாபிரிக்கா (1999, இடம்: பர்மிங்காம்), தென்னாபிரிக்கா–இலங்கை (2003, இடம்: டர்பன்), அயர்லாந்து–சிம்பாவே (2007, இடம்: ஜமைக்கா), இந்தியா–இங்கிலாந்து (2011, இடம்: பெங்களூர்) அணிகள் மோதிய போட்டிகள் சமநிலையானது.
  • இப்போட்டி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், சமநிலையான 3வது இறுதிப் போட்டியாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா–மேற்கிந்தியத் தீவுகள் (உலக சீரிஸ் கிண்ணம், 1984, இடம்:மெல்போர்ன்), இங்கிலாந்து–ஆஸ்திரேலியா (நாட்வெஸ்ட் சீரிஸ், 2005, இடம்: லோர்ட்ஸ்) அணிகள் மோதிய இறுதிப் போட்டி சமநிலையானது.

மூன்றாவது அணி

இங்கிலாந்திடம் வீழ்ந்த நியூசிலாந்து, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தொடர்ச்சியாக 2 முறை தோல்வியடைந்த 3வது அணியானது. இதற்கு முன், 2015ல் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஏற்கனவே இங்கிலாந்து (1987, 1992), இலங்கை (2007, 2011) அணிகள் தொடர்ச்சியாக 2 இறுதிப் போட்டிகளில் வீழ்ந்தன.

அடுத்து இந்தியா

இங்கிலாந்தில், 12ஆவது ஐ.சி.சி., உலகக் கிண்ணத் தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இனி, 13வது உலகக் கிண்ணத் தொடர் வரும் 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ளது. முதன்முறையாக இந்தியா, தனித்து உலகக் கிண்ணத் தொடரை நடத்துகிறது. இறுதிப் போட்டி மும்பையில் நடக்கவுள்ளது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!