வாழ்நாள் முழுவதும் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் – பென் ஸ்டோக்ஸ்

0

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

லோர்ட்சில் நேற்று நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 242 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பென்ஸ்டோக் 70(92) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். டிரெண்ட் போல்ட் அந்த ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் பென்ஸ்டோக் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. அதனால், 4 பந்துகளில் 15 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. அதனையடுத்து, மூன்றாவது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார் ஸ்டோக்ஸ். பின்னர், 3 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

போல்ட் வீசிய நான்காவது பந்தினை அடித்துவிட்டு இரண்டு ஓட்டங்கள் ஓட முயன்றார் ஸ்டோக்ஸ். களத்தடுப்புச் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் காப்பாளரிடம் வீசினார். ஆனால், ஸ்டம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் துடுப்பில் பட்டு, அங்கிருந்து எல்லைக் கோட்டை சென்றடைந்தது. அதனால், ஓடி எடுத்த இரண்டு ஓட்டங்களுடன், ஓவர் த்ரோ மூலமாக 4 நான்கு ஓட்டங்கள் கூடுதலாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. அந்த பந்திலும் சிக்ஸர் அடிக்கப்பட்ட கணக்குதான்.

அதனால், இரண்டு பந்துகளில் மூன்று ஓட்டங்கள் என்ற எளிதான நிலைக்கு இலக்கு வந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டு ஓட்ட எண்ணிக்கை சமநிலையை அடைந்தது. அந்த 4 ஓட்டங்கள் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய உதவியாக இருந்தது. அதாவது இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், உலகக் கிண்ணம் வென்றதற்கு பின்னர் பேசிய ஸ்டோக்ஸ், “எல்லோருடைய ஒட்டுமொத்த கடினமான உழைப்பும் எங்களை சம்பியன்ஸ் ஆக்கியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானது. ஓவர் த்ரோ மூலம் கிடைத்த அந்த 6 ஓட்டங்களுக்காக என் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன். எங்களுக்குதான் உலகக் கிண்ணம் என்று நட்சத்திரங்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.