இரண்டு சட்டங்களை மீறாமல் ஆலயங்களில் மிருகபலியிடலாம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாக்கியானம்

0

“ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தும் போது இறைச்சிக் கடைக் கட்டளைச் சட்டத்தில் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், மிருக வதைச் சட்டத்தை மீறாமல் அதனை முன்னெடுக்கவேண்டும். இந்த இரண்டு சட்ட ஏற்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த முடியும்”

இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

“மிருகங்களை பலியிடுவதற்கு இலங்கையில் நடைமுறையில் உள்ள இரண்டு சட்ட ஏற்பாடுகளையும் மீறாமல் ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த முடியும் என்று உயர் நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்புக்கள் நாடுமுழுவதுமுள்ள குடிமக்களுக்கு பொதுவானது. அவ்வாறிருக்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண மேல் நீதிமன்றம், வடக்கு மாகாணத்தில் உள்ள குடிமக்களை புதிய சட்டத்தின் ஊடாகக் கட்டுப்படுத்த முடியாது” என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மகிந்த சமயவர்த்தன தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மிருகபலியிட்டு வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளை பற்றி நீதியரசர் மகிந்த சமயவர்த்தன, “பொதுநல வழக்கீடு என்ற அடிப்படையில் பிரபல்யமாவதற்காக எந்த வழக்கும் தீர்மானிக்கப்படக் கூடாது. அவ்வாறான வழக்கே இதுவாகும்” என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.

“ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்துவதற்கு முற்றாகத் தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளை தள்ளுபடி செய்யப்படுகிறது. முதல் மனுதாரரான அகில இலங்கை சைவ மகா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்து தலையீட்டு மனுதாரரான கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தின் தலைவர் சின்னத்துரை புஸ்பராசாவுக்கு வழக்குச் செலவாக ரூபா 50 ஆயிரத்தைச் செலுத்த வேண்டும்” என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

மனுவின் எதிர்மனுதாரர்களாக அகில இலங்கை சைவ மகா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்து மற்றும் சட்ட மா அதிபர், ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

அகில இலங்கை சைவ மகா சபை சார்பாக சட்டத்தரணி லக்மணன் ஜெயக்குமார் மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி மனோகர ஜெயசிங்க ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகினர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மகிந்த சமயவர்த்தன, கே.கே.விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

பின்னணி

“யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்” எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.

“இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.