தரம் 13இல் தொழில் பயிற்சியைப் பெறுவோருக்கு ரூபா 500 ஊக்குவிப்புத் தொகை – கல்வி அமைச்சு தெரிவிப்பு

0

13 வருட கல்வியை உறுதி செய்யும் கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தரம் 13இல் உயர் தொழில்நுட்ப கல்வியை கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கல்வி கட்டமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தரம் 13 வரையிலான கல்வியை உறுதிசெய்யும் கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தரத்தில் தொழில்நுட்ப கற்கை நெறியை கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நிறுவன பயிற்சியை நிறைவு செய்யும் காலப்பகுதிக்குள் 500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை பெற்றுக் கொடுப்பதை கட்டாயப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாக 2017ஆம் ஆண்டு தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டமாகும்.

எதிர்கால உலகத்துக்கு பொருத்தமான மனித வளத்தை நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உயர்தர கற்கை நெறிக்குள் புதிய கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தி தொழில் கற்கை நெறியின் கீழ் 13 வருடம் உறுதிசெய்யப்பட்ட கல்வியை வழங்குவதற்காக பாடசாலைகளில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு எவ்வாறாக இருந்த போதிலும் இந்த கற்கை நெறியின் கீழ் உயர்தரத்தை தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகும்.

சாதாரண தரத்தில் சித்தி அடையத் தவறும் மாணவர்களுக்கு உயர் தொழில் கற்கை நெறியை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான 27 தொழில் கற்கை நெறிகள் மத்தியில் தாம் விரும்பும் 3 கற்கை நெறிகளை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சிறுவர் உளவியல் உடற்கல்வி மற்றும் விளையாட்டு, இசை, சிற்ப கலை, அலங்கார தயாரிப்புகள், கால்நடை உற்பத்தி தொழில்நுட்பம், உணவு தயாரிப்பதற்காக திட்ட தொழில்நுட்பம், கட்டட நிர்மாண தொழில்நுட்ப கல்வி, மின்சாரம் மற்றும் இலத்திரனியல், சுற்றுலாத்துறை பராமரிப்பு சேவைகள், நெசவு தொழில் ஆடை தொழிற்துறை தொழில்நுட்பம் உள்ளிட்ட 26 தொழில்நுட்ப கற்கை நெறிகளுக்கு அமைவாக இந்த தொழில் கற்கை நெறிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் கற்கை நெறியை கற்கும் மாணவர்களுக்கு முதல் வருடத்தில் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 3 கற்கை நெறியின் கீழ் நடைமுறைப் பயிற்சியை பெற்றுக்கொள்வதற்கும் 2ஆவது வருடத்தில் தாம் விரும்பும் கற்கை நெறியை தெரிவு செய்து தொழில் பயிற்சியை பெற்று கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் -என்றுள்ளது.