நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்தார்.

நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (ஜூலை 19) வெள்ளிக்கிழமை பிற்கபல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.


இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய போதே பெருந்திருவிழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் விளக்கமளித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், இந்து மதப் பெரியார்கள், மாநகர ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உதவிப் பிரதேச செயலாளர், மாநகர சபை உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கம், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொது அமைப்புக்கள், தொண்டர் சேவையில் ஈடுபடவுள்ள அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சுற்றாடலில் வதிகின்ற – தண்ணீர்ப்பந்தல் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாலில் அறிவிக்கப்பட்டுள்ள நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் வருமாறு :

வழமை போல, இம்முறையும் நல்லூர் உற்சவ காலத்தில் தேவையான பொதுச் சுகாதாரம், போக்குவரத்து ஏற்பாடுகளை மாநகர சபை செயற்படுத்தவுள்ளது. உற்சவ காலத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்களின் நலன் கருதி ஆலய வீதிகளுக்கு மணல் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீதித் தடைக்குள் – ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் பகுதிகளினுள் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

வீதித்தடைகளினுள் வதிகின்றவர்களுக்கான உள்நுழைவு அனுமதி அந்ததந்தப் பகுதி கிராம சேவையாளர்களின் பதிவின் பிரகாரம், பிரதேச செயலக மற்றும் மாநகர சபை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும். இவை தவிர ஆலய நிர்வாகத்தினரால் அனுமதிக்கப்படுபவர்களுக்கும், மாநகர சபை உறுப்பினர்களுக்கும் வீதித் தடைகளின் ஊடாகப் பயணிப்பதற்கான உள்நுழைவு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.

வழமையான இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும். தேசிய பாதுகாப்புக் கருதி பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய வீதித்தடைகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஆலயப் பிரதேசத்தினுள் அடங்கும் பருத்தித்துறை வீதி, கோவில் வீதிகளுக்கான மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுப் போக்குவரத்து மார்க்கங்கள் மாற்றியமைக்கப்படும்.

இம்முறை ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன் வீதி – பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

காவடிகள் வருகின்ற முன் வீதி தவிர்ந்த ஏனைய பக்கங்களின் வழமையை விட சற்றுத் தள்ளி கடைகள் அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமைகளைக் கருத்தில் கொண்டு பொலிஸ் தலைமை அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.