மாகோ- ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்கிறது இந்தியா

0

மாகோ தொடக்கம் ஓமந்தை வரையிலான- வடக்கிற்கான 133 கிலோ மீற்றர் தொடருந்து பாதையை இந்திய உதவியுடன் மீளமைப்புச் செய்வதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

91.26 மில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தை இந்தியாவின், இர்கோன் நிறுவனம் நிறைவேற்றவுள்ளது.

12 தொடருந்து நிலையங்கள், 7 நிறுத்தங்கள், 78 குறுக்குப் பாதைகளை உள்ளடக்கியதாக, இந்தப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 115 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த தொடருந்துப் பாதை மீளமைக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும், தற்போது 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய தொடருந்துகள், இரட்டிப்பு வேகத்தில், மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்துடன் பயணம் செய்ய முடியும். அத்துடன் பராமரிப்புச் செலவினங்களும் குறையும்.

2017ஆம் ஆண்டு இலங்கையின் தொடருந்து துறையின் அபிவிருத்திக்கு, 318 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கும் உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டது.

இந்த கடன் திட்டத்தின் கீழேயே, மாகோ – ஓமந்தை தொடருந்து பாதை மீளமைப்பு பணியும் முனனெடுக்கப்படவுள்ளது.

இதற்கான உடன்பாட்டில், இர்கோன் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சுனில் குமாரும், இலங்கை நெடுஞ்சாலைகள், விமான சேவைகள் அமைச்சின் செயலர் ஜெயம்பதியும் கையெழுத்திட்டனர்.