‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்னேஸ்வரன்

0

தமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவை, அவரது கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று க.வி.விக்னேஸ்வரன் சந்தித்து இரகசிய பேச்சுக்களை நடத்தினார் என வெளியாகிய செய்திகள் குறித்து, கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பசில் ராஜபக்சவை கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, கண்டிருக்கின்றேன். அவருக்கும் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவரைச் சந்திக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக, எதிர்கட்சியுடன் நான் சேர்ந்து கொள்வதாக காட்டிக் கொள்வதற்காக சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நான் பசில் ராஜபக்சவை சென்று சந்தித்தாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது.

நான் எனது கட்சியை பலப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.

எனது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணி என்று கூறமுடியாது.

நாங்கள் தமிழ் மக்களின் வேணவாக்களை வென்றெடுக்க வேண்டும். கூட்டமைப்பு எந்த காரணங்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை.

இதன் காரணமாக அடிப்படை கொள்கை ரீதியாக ஒத்துச் செல்லும் ஒரு அணிக்கு நான் தலைமை தாங்குகின்றேன் என்றே கூறமுடியும்” எனவும் கூறியுள்ளார்.