குளவிக் கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் பரிதாபச் சாவு

0

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதங்களான கர்ப்பிணிப் பெண் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. 

சாவகச்சேரி  மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த விமலதாசா இராஜரோகினி (வயது – 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.

கடந்த 27ஆம் திகதி மாலை 5 மணியளவில் தனது இரண்டு பிள்ளைகளையும் தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்து சென்று அந்தப் பெண் வீடு திரும்பியுள்ளார்.

மட்டுவில் தெற்கு பகுதியில் மேல் மாடி வீட்டில் கட்டியிருந்த குளவிக் கூடு காற்றுக்கு கலைந்து பிள்ளைகள் இருவரையும் இவரையும் துரத்தியுள்ளன. பிள்ளைகள் இருவரும் ஓடி தப்பிய நிலையில் கர்ப்பிணிப் பெண் அதிக தூரம் ஓட முடியாததன் காரணமாக கடுமையான குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

அதே  வழியில் வந்த நபர் ஒருவர் அம்புலன்ஸ் வாகனத்தினை வரவழைத்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த அம்புலனஸ் வாகனம் குளிவி கொட்டிய பெண்ணை காப்பாற்றாமல் மீளவும் திரும்ப செல்ல முற்பட்டுள்ளது. இதன் போது ஊர்மக்கள் ஒன்று கூடி வீதியின் நடுவில் நின்று அம்புலனஸ் வாகனத்தை மறித்து பெரும் பிராயத்தனத்தின் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  கர்பிணிப் பெண் இன்று(30) காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.