யாழ்ப்பாணத்திலிருந்து நாளைமுதல் மாலை நேர கடுகதி சேவை ஆரம்பம் – இரவு தபால் சேவை நேரமும் பின்நகர்த்தப்பட்டது

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – கொழும்புக் கோட்டை இடையேயான தொடருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ரயில்வேஸ் அறிவித்துள்ளது.

இதற்கமைய இரவு நேர தபால் தொடருந்து சேவைகள் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன் மாலை நேர கடுகதி சேவை புதிதாக ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4081 என்ற இலக்க தொடருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை 6.31 ற்கு சென்றடையும். இதே போன்று 4087 இலக்க தொடருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும்.

4082 என்ற இலக்க ரயில் நாளை மறுதினம் முதல் நாளாந்தம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25 ற்கு புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இதே போன்று இலக்கம் 4088 என்ற தொடருந்து நாளை மறுதினம் முதல் நாளாந்தம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.40 க்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் என்று சிறிலங்கா ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய மாற்றம் நாளை ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது.

காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு உத்தரதேவி நகர்சேர் கடுகதியும் அதன்பின் காலை 8.25 மணிக்கு யாழ்.தேவியும் பிற்பகல் 1.15 மணிக்கு குளிரூட்டப்பட்ட அதிசொகுசு நகர்நேர் கடுகதியும் புறப்படும். மேலதிகமாக மாலை 5.45 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு மற்றுமொரு புதிய தொடருந்து சேவையும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இரவு தபால் தொடருந்து சேவை பின்னகர்த்தப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் பிரகாரம் இரவு தபால் தொடருந்து சேவை இரவு 7.45 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும்.

அத்துடன், கொழும்பிலிருந்து குளிரூட்டப்பட்ட அதிசொகுசு நகர்நேர் கடுகதி தொடருந்து அதிகாலை 5.45 மணிக்கும் யாழ்.தேவி காலை 6.35 மணிக்கும் உத்தரதேவி முற்பகல் 11.50 மணிக்கும் புறப்படும். இரவு தபால் சேவை இரவு 9 மணிக்கே புதிய மாற்றத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.