ஆஷஸ் முதல் போட்டியில் ஆஸி அபார வெற்றி – சிமித் அசத்தல்

0

ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் மிகப்பெரிய வரலாறு கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர், கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் சிமித் 144 ஓட்டங்கள் குவித்தார். ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 374 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராரி பர்ன்ஸ் 133 ஓட்டங்கள் எடுத்தார். லயன், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

90 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.

நட்சத்திர வீரர் ஸ்டீவ் சிமித் 142 ஓட்டங்கள் விளாசினார். மத்யூ வேட் 110 ஓட்டங்கள் சேர்த்தார். பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இந்நிலையில், 398 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் 5-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், 146 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

அபாரமாகப் பந்துவீசிய நாதன் லயன் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரு இன்னிங்ஸிலும் சதம் கண்ட ஸ்டீவ் சிமித், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சிமித்தின் சாதனைகள்
போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ஸ்டீப் சிமித் 275 ஓட்டங்களை பெற்றுள்ளார் (144 மற்றும் 131). இந்த ஓட்ட எண்ணிக்கையே சிமித் டெஸ்ட் போட்டி ஒன்றில் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக பதிவாகியுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய 8ஆவது வீரர் என்ற பெருமையையும், 5 ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இவர் பெற்றுக் கொண்ட 10 ஆவது சதம் இது என்பதுடன், அந்த அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரில் அதிக சதங்கள் அடித்த ஸ்டீவ் வோக்கை ஸமித் சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சிமித் இந்த இரண்டு சதங்கள் ஊடாக மொத்தம் 25 சதங்களை விளாசியுள்ளார். 119 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய ஸ்டீப் சிமித் குறைந்த இன்னிங்சில் 25 சதங்கள் அடித்தவர்களின் வரிசையில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here