சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஹசிம் அம்லா ஓய்வு

0
13

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 என அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெற்றுள்ளதாக அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் ஹசிம் அம்லா தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹசிம் அம்லா தென்னாபிரிக்க அணிக்காக சுமார் 15 ஆண்டுகள் நம்பிக்கை நட்சத்திரமாக ஆடி வந்துள்ளார். ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் அவர் 2008ஆம் ஆண்டு அறிமுகமாகியிருந்தாலும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக ஆடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதியாக இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியே அவரது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாகும். அதில் ஹசிம் அம்லா 80 ஓட்டங்களை எடுத்து தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெறக் காரணமாகவிருந்தார். எனினும் உலகக் கிண்ணத் தொடரில் அவர் 9 இன்னிங்களில் 203 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திருந்தார்.

124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா 215 இன்னிங்ஸ்களில் 28 சதங்கள், 41 அரைச்சதங்கள் அடங்கலாக 9 ஆயிரத்து 282 ஓட்டங்களை (சராசரி 46.64) எடுத்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் 27 சதங்கள், 39 அரைச்சதங்கள் அடங்கலாக 8 ஆயிரத்து 113 ஓட்டங்களை (சராசரி 49.46) எடுத்துள்ளார்.

அத்துடன், 44 ரி20 போட்டிகளில் 8 அரைச்சதங்கள் அடங்கலாக ஆயிரத்து 227 ஓட்டங்களை (சராசரி 33.60) எடுத்துள்ளார்.