சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகரே! இது உங்களின் கவனத்துக்கு!!

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் சிலர், தமது சேவையை மறந்து செயற்படுவதுடன், நோயாளிகளுடன் அடாவடியாக நடந்து கொள்கின்றனர்.

புத்தூர்ப் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று (ஓகஸ்ட் 11) இரவு புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று குடும்பத்தலைவரை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பா.சிவகுமார் (வயது-43) என்ற குடும்பத்தலைவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கான சிகிச்சைகள் இடம்பெறும் போது சுகாதார ஊழியர் ஒருவர், “குடித்துவிட்டு வெறியில் இருக்கிறாய்” என்று மிரட்டியுள்ளார்.

அத்துடன், கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தர்களும் சுகாதார ஊழியர்களும் காயமடைந்தவருக்கு சிகிச்சையளிப்பதில் அக்கறை காட்டவில்லை. காயமடைந்தவர்களுடன் அவர்கள் எரிந்து வீழ்ந்தனர்.

பின்னர் அவரை மேலதிக சிசிக்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக அம்புலன்ஸ் வண்டி அழைக்கப்பட்டது. எனினும் அம்புலன்ஸ் வண்டியில் கடமையாற்றும் உதவியாளர் தூக்கத்தில் இருந்ததால் அவர் எழுந்து வர சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகின.

இதனால் மேலதிக சிசிக்சைக்காக அனுப்பிவைக்கப்படவேண்டிய நோயாளி காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

கடமையில் உள்ள அரச ஊழியர் ஒருவர், தனது சேவையை சீராகச் செய்ய முடியவில்லை எனில் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமகனே ஆகும். ஊழியர்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது மேலதிகாரிகளின் கடமையாகும்.

நோயாளிகள் அனுமதிக்கப்படும் போது, அவர்கள் மதுபோதையில் இருக்கிறார்களா? என்று மிரட்டிக் கேட்பது சுகாதார ஊழியரின் கடமையில்லை. மருத்துவர் உரிய சிசிக்சை வழங்க நோயாளிக்கு உரிய சேவையை வழங்குவதே சுகாதார ஊழியரின் கடமையாகும்.

எனினும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இது முதன்முறை இல்லை இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது. எனவே இதுதொடர்பில் வைத்தியசாலை அத்தியட்சகர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

பாதிக்கப்பட்ட பொதுமகன்.

உங்கள் பிரதேசங்களில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் மற்றும் குறைகள் தொடர்பில் முதல்வனின் ஆசிரியர் பீடத்துக்கு அனுப்பிவையுங்கள். அதுதொடர்பில் ஆராய்ந்து குறைகள் வெளிப்படுத்தப்படும். (ஆ-ர்)

Viber, whatsapp -0769199155