செஞ்சோலை மாணவிகள் படுகாலையின் 13ஆவது நினைவேந்தல்

0

அரச படையினரின் விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்ல மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டு 13ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நேரமான காலை 6.05 மணிக்கு செஞ்சோலையில் மக்கள் மற்றும் வன்னிக்குறோஸ் நினைவேந்தல் அமைப்பினர் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக வள்ளிபுனம் முதன்மை வீதியிலிருந்து இடைக்கட்டு வீதியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவு திறந்து வைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவிகளின் நினைவாக வன்னிக்குறோஸ் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நடைபெற்றது.

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி செஞ்சோலை வளாகம் மீது விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 61 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர்.

செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று நடைபெற்றது.
இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையார் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பொதுச் சுடர் ஏற்றி வைக்க வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் மலர்மாலை அணிவித்தார்.

அத்துடன், தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் அவர்களுடைய உறவுகளால் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுடைய ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவு தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
வன்னிகுரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளின் உடைய பெற்றோர்கள், இன உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரத்தியே இடம்

இதேவேளை, விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் செஞ்சோலை வளாகத்தின் ஓர் இடத்தில் நேற்றுக்காலை கடைப்பிடிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கள்ளப்பாடு
முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியிலுள்ள தனது மக்கள் தொடர்பகத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நினைவேந்தலில் ஈடுபட்டார். இதில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.