கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப் போகிறீர்களா? – யாழ்ப்பாணத்தில் நின்று ரணில் கேள்வி

“மகிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருநெல்வேலியில் விவசாய ஆராட்சி, உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்தார். அத்துடன், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகளையும் அவர் வழங்கிவைதத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதியின் ஆரம்பம் 1954 என்றாலும் 1960ஆம் ஆண்டிலேயே ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இங்கு போதுமான அலுவலர்கள் இல்லை. இங்கு உற்பத்தி விவசாயப் பொருள்களை பெரிய பூசணிக்காய்களையும் ஏனைய மரக்கறி வகைகளையும் பார்க்கும் போது, அவை எப்படிச் செழிப்பாக வளர்ந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

நாங்கள் இந்தத் தொழில்களை நவீனமயப்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த அறுவடை பெற இயலும். மீன்பிடித் துறையை அப்படி நவீனமயமாக்கி குளிரூட்டிகளை அமைக்கவுள்ளோம். இதில் தனியாரும் அரசும் இணைந்தே செயற்படவேண்டும்.

21ஆம் நூற்றாண்டை நோக்கி நாங்கள் முன் செல்ல வேண்டும். நான் நல்லூர் ஆலயம் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு இன்று சென்றேன். இப்போது மக்கள் அமைதியாக – சந்தோசமாக வாழ்வதை நான் கண்டேன்.

மகிந்த – கோத்தாபய ஆட்சிக் காலத்தில் இந்த நிலமையா இருந்தது. மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தார்கள். துரதிஷ்டவசமாக எங்கள் அரசின் காலத்தில் தேவாலயங்களில் குண்டுகள் வெடித்தன. அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய 200 பேர்வரை கைது செய்யப்பட்டுவிட்டனர். நாங்கள் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கொழும்பு உச்சக் கட்டப் பாதுகாப்புப் பகுதியாகக் கூறப்பட்ட காலத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சரியாகச் சிங்களம் பேசுவதில்லை என்பதாலேயே கொல்லப்பட்டதாகக் கூறினார்கள்.

கொழும்பில் உச்சகட்டப் பாதுகாப்பு இருந்த காலகட்டத்திலே இடம்பெற்ற இந்தக் கொலையை செய்தவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பாதுகாப்புக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில்தான் அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் எங்கள் அரசுடன் சார்ந்து செயற்பட்டதாலேயே விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றனர் எனக் கூறப்பட்டது.

இவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியில் எப்படி விடுதலைப் புலிகள் அங்கு வந்து அவரைச் படுகொலை செய்ய முடியும். அவரைச் சுட்டவர்களை மகிந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு அமைச்சருக்கே பாதுகாப்பு அளிக்க இயலாத மகிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது. நாங்கள் அமைதியாக முன்னோக்கிச் சென்று தம்புள்ள, வெளிமடை போன்ற விவசாய வர்த்தக நிலையமொன்றை யாழ்ப்பாணத்திலும் உருவாக்குவோம் – என்றார்.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!