ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமாரவை களமிறக்குகிறது ஜேவிபி

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடவுள்ளார் என, ஜேவிபி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமானவர் அனுரகுமார திசநாயக்கவே என்று, அதிகளவான ஜேவிபி உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை மறுதினம் ஞாயிறுக்கிழமை காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள ஜேவிபியின் மாநாட்டில், அனுரகுமார திசநாயக்கவை வேட்பாளராக அறிவித்து, ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

முன்னதாக, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற, புகழ்பெற்ற ஒருவரை ஜேவிபி வேட்பாளராக முன்நிறுத்த முடிவு செய்யப்பட்டது. எனினும், இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 2 லட்சத்து 73 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அதன் பின்னர், 1999 ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 3 லட்சத்து 44 ஆயிரத்து 173 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!