பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விரைவில் தரமுயர்த்தப்படும் – சுகாதார அமைச்சர் ராஜித உறுதி

0

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான புதிய கட்டடத்தை அமைக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அடிக்கல் நட்டு வைத்தார்.

நெதர்லாந்து அரசின் ஆயிரத்து 180 மில்லியன் ரூபா நிதி உதவியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படுகிறது. அதற்கான கட்டடத்த்தின் ஆரம்ப பணிகள் இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உரையில் தெரிவித்ததாவது:

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொது சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோன்று இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரனும் இதே கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

இந் நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய விரைவில் ஆதார வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் – என்றார்.

மேலும் வைத்தியசாலைக்கு குழந்தை மருத்துவ நிபுணர் இல்லை என்று பொறுப்பு வாய்ந்த அதிகாரி தெரிவித்திருக்கின்ற நிலையில் எதிர்வரும் ஒரு மாதத்தில் இங்கு குழந்தை பெறுபேறு மருத்துவ நிபுணரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன், மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.