தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்- பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

0

“தமிழகம், கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று கோவை மாநகர பொலிஸ் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

அதே போல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர பொலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீவிரவாத அச்சுறுத்தல் வந்தது உண்மைதான் என்றும், நேற்று இரவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

கோவையில் வழக்கத்திற்கு மாறாக பொலிஸார் பல இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உக்கடம், டவுன்ஹால் பகுதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என ஆங்காங்கே பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, வாகனங்களை சோதனையிடுவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், இலங்கையை சேர்ந்த 5 பேர் என மொத்தம் ஆறு நபர்கள் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் லக்‌ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் மத்திய உளவுத்துறையில் இருந்து தமிழக பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக கோவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

ஆனால், பொலிஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.