கட்டுவன் – மயிலிட்டி வீதி – கட்டுவன் சங்கனை வீதிகளை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

0

பலாலி விமான நிலையம் செல்வதற்கான பிரதான வீதியாக  வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ( RDA)  தெல்லிப்பளையில் இருந்து கட்டுவன் –  மயிலிட்டி வீதியும்,  கட்டுவன் சந்தியிலிருந்து-மல்லாகம் -சங்கானை வீதி ஆகிய வீதிகள்  கடுமையாக சேதமடைந்து குன்றும் குழியுமான நிலையில் உள்ளன.

இந்த வீதிகளைத் திருத்துவதற்கான அளவீட்டுப் பணிகள் முடிவடைந்த நிலையில் இதுவரை சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் பாடசாலைகள் அந்த வீதிகளில் உள்ளன.

கட்டுவன், மயிலிட்டி குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள்  மீள்குடியமர்ந்தனர்.   மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் இந்த வீதி ஊடான போக்குவரத்தில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போது பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் கட்டுவன் – மயிலிட்டி வீதி பிரதான வீதியாக மாற்றப்படவுள்ளது.

அடுத்த மாதம் 16 ஆம் திகதி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே உடனடியாக இந்த வாரமே காப்பெட் வீதியாக சீரமைக்கவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் கட்டுவன் மயிலிட்டி வீதியைச் சீரமைக்கும் வேளையில்  கட்டுவன் சந்தியிலிருந்து மல்லாகம் சங்கானை  வீதியையும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர்,  வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண வீதி அபிவிருத்தி அதிகார சபை  தலைவர், வலி.வடக்கு பிரதேச சபை செயலர் ஆகியோருக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை,  கட்டுவன் மயிலிட்டியுடன் இணைந்த கிராமகோட்டு சந்தியில் உள்ள இராணுவ வேலியை பின்நகர்த்த இராணவத்தினர் தாமதித்து வருகின்றனர்.  கட்டுவன் மயிலிட்டி வீதியில் ஒருபகுதியை அபகரித்து இந்த வேலி அமைத்து வைத்துள்ளதால் கிட்டத்தட்ட 500 மீற்றர் மக்களின் காணியூடாகவே தற்போது வீதி செல்கின்றது.

எனவே இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலியை பின்நகர்த்தினாலேயே வீதியை
முழுமையாக சீரமைப்பு செய்ய முடியும். இராணுவத்தினர் இந்த வேலியை அகற்ற யாழ்.மாவட்ட அரச அதிபர், யாழ்.மாவட்ட கட்டளை தளபதி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.