அச்சத்தில் யாழ்.குடாநாட்டு மக்கள் – உறக்கத்தில் பொலிஸார்

0

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு வன்முறைகள், வழிப்பறிக் கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸார் தவறியுள்ளனர். பொலிஸாரின் தூங்கு நிலையால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் மக்கள் அச்சத்துடனேயே இரவுப் பொழுதுகளைக் கழிக்கின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 31ஆம் திகதி நிறைவடைந்தது. நல்லூர் ஆலய திருவிழாவில் 600 பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அதனால் பொலிஸ் நிலையங்களில் பொலிஸாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் செப்ரெம்பர் முதலாம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

செப்ரெம்பர் முதலாம் திகதி கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த பெறுமதியான பொருள்கள், தளபாடங்களை உடைப்பு அடாவடியில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது. இரண்டு வீடுகளில் ஒரு வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கக்கூடச் செல்லவில்லை. பொலிஸில் முறைப்பாடு வழங்குவதால் எந்தப் பிரியோசனம் இல்லை என்று அவர் இருந்துவிட்டார்.

அத்துடன், யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்களுடன் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் காரணமாக வீடு புகுந்து வன்முறைக் கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டது.

சாவகச்சேரி நகரில் கடந்த 3ஆம் திகதி இரவு புதன்கிழமை இரவு பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டுக் கும்பல் அடாவடியில் ஈடுப்பட்டது. நகரில் நின்றவர்களை வாளால் அச்சுறுத்தி விரட்டியதுடன், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சகர வண்டி என்பவற்றை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

அத்துடன், கடந்த புதன்கிழமை இரவு வாரகி அம்மன் கோவிலடியில் இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

அன்றிரவு நல்லூர் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் உடும்பிராய் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் 5ஆம் திகதி இரவு புகுந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று வீடு புகுந்து அடாவடியில் ஈடுபட்டது.

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

கடந்த 7 நாள்களில் நடைபெற்ற பத்துக்கும் மேற்பட்ட வாள்வெட்டு வன்முறைகள் தொடர்பில் இன்றுவரை ( செப்ரெம்பர் 7) எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை. அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுக்கவில்லை என்றே கூறவேண்டும்.

கடந்த சில நாள்களாக யாழ்ப்பாணம் கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலியில் திருமணம் நிகழ்வு நடைபெற்ற வீடொன்றுக்குள் அதிகாலையில் புகுந்த கொள்ளைக் கும்பல், திருமண வைபவ காணொலியைக் காண்பித்து அந்த வீட்டில் உள்ளவர்களின் நகைகளைக் கொண்டு வருமாறு மிரட்டி கொள்ளையடித்துச் சென்றது.

சம்பவத்தில் அந்த வீட்டில் வசிக்கும் ஒருவரையும் அவலக் குரல் கேட்டுச் சென்ற அயல்வீட்டு இளைஞரையும் (பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரர்) வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு கொள்ளைக் கும்பல் தப்பித்தது. அதில் மூவர் மட்டும் கைது செய்யப்பட்ட போதும் முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை. கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் பஸ்தியான் சந்தியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளம் பெண்ணிடம் கைப்பை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தமக்குக் கிடைத்த தகவலின்படி பிடித்து சந்தேகநபரைக் கைது செய்தனர்.
அதனைத் தவிர வழிப்பறிச் சம்பவம்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முறைபாடு செய்ய பொலிஸ் நிலையம் செல்பவர்களை வழக்குகள் கூடிவிடும் என்று இழுத்து அடிக்கும் யாழ்ப்பாணம் பொலிஸார், பொதுமக்களை அலைக்கழிக்கிறார்கள்.

வழிப்பறிச் சம்பங்கள் அதிகரிப்பால் மக்கள் பீதியில் உள்ளனர். வீதியால் செல்லும் ஒருவரை மறித்து விலாசம் கேட்டால் மூன்று அடி தள்ளி நின்று பதிலை பாதியில் சொல்லி ஓடி விடுகிறார்கள்.

பல இடங்களில் இளைஞர்களை மறிக்கும் கொள்ளையர்கள் “நீதானே என் தங்கையை படம் எடுத்தாய்” என மிரட்டி அலைபேசியை வாங்கி பார்க்கிறார்கள். பின்பு அலைபேசியுடன் ஓடித் தப்பிவிடுகிறார்கள். இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் நல்லூர் உள்ளிட்ட இளைஞர்கள் கூடிநிற்கும் இடங்களில் இடம்பெறுகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய இளைஞர்கள் விரும்புவதும் இல்லை, அவ்வாறு முறைப்பாடு செய்வதற்குச் சென்றால் காத்திருக்கவேண்டும் என்ற மனநிலையும் அவர்களிடம் உண்டு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 30ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த அச்சுவேலியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணின் கைப்பை நகரில் வைத்து கொள்ளையன் ஒருவனால் அபகரித்துச் செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வயோதிபப் பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முறைபாடு வழங்கச் சென்றுள்ளார். எனினும் அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார், “நீங்கள் ஊர் பொலிஸ் நிலையத்துக்கு போய் முறைப்பாடு வழங்குங்கள்” என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சௌந்தர்நாயகம் மீடியா நிறுவனத்தின் இயக்குனரான அருட்தந்தை, தனது வீட்டை ஒருவரிடம் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு அவர் வெளிநாட்டு சென்றுள்ளார். வெளிநாட்டிலிருந்து அண்மையில் திரும்பிய அவர், வீட்டை வந்து பார்த்தால் அங்கிருந்த பெறுமதியான பொருள்கள் காணாமற்போயுள்ளன – திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அருட்தந்தை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கச் சென்றுள்ளார். எனினும் நேரில் வந்து பார்த்துவிட்டு முறைப்பாடு வழங்குவதாக அவரைப் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

எனினும் இன்னும் யாழ்ப்பாணம் பொலிஸார் அருட்தந்தையின் வீட்டுக்குச் செல்லவும் இல்லை, அவரது முறைபாடு பதியப்படவுமில்லை, வீட்டை பொறுப்பாக கொடுத்தவரை அழைத்து விசரிக்கவும் இல்லை.

யாழ்ப்பாணம் பொலிஸார் அண்மைக்காலமாக இரவு நேர சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபடுவதில்லை. அதனால் நகரில் பொது இடங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பொது இடத்தில் மரு அருந்திய குற்றச்சாட்டில் அண்மைக்காலமாக எவரும் கைது செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் பெரிய கடைப் பகுதியில் இளைஞர்களின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸாரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை திறந்த மன்றுக்குள் வழக்கு நடவடிக்கைக்காகக் காத்திருந்தவரிடம் அவரது காற்சட்டைப் பைக்குள்ளிலிருந்து காசுப்பை திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவில் நீதிமன்றப் பொலிஸ் அலுவலகர் முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.

இவ்வாறு துணிகரமிக்க திருடர்கள் நடமாடும் நிலையில் பொலிஸார் அசமந்தமாகவே தமது கடமையைச் செய்கின்றனர்.

குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் அவை தொடர்பில் பொலிஸாரை இயக்குவிக்கும் பொறுப்பு பொது நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனத்துக்கு உண்டு.

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர், மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

முதல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here