யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசாரா ஆட்சேர்ப்பில் நடப்பது என்ன? ஓர் அலசல்! பாகம் – 1

0

நரசிம்மன்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் போதனைசாரா ஊழியர்களின் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் பாதிக்ப்பட்டிருப்பதாகக் கூறி, யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் களமிறக்கப்பட்ட ஒரு சாரார் தவணை முறையில் உணவொறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உணவொறுப்புப் போராட்டம் வெற்றியைத் தருமா? என்கிற பார்வையில் இந்த பத்தி ஆராய முனைகிறது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் குறிப்பிட்ட சில போதனைசாரா பதவி நிலைகளுக்கு உயர் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் பட்டியல் மூலமாகவே ஆள்சேர்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 876ஆம் இலக்க சுற்றறிக்கையின் படி குறிப்பிடப்பட்டு, 2006 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறையின் படியே ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் இந்தச் சுற்றறிக்கையின் கீழான பரிந்துரைகள் உயர்கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும். எவரொரு பொதுமகனும் அந்த நடைமுறையில் கீழ் தனது பெயரை உயர்கல்வி அமைச்சின் செயலாளரால் உயர்கல்வி நிறுவனற்களுக்கு அனுப்பி வைக்கும் பட்டியலில் சேர்க்கும் படி நேரடியாகக் கோர முடியாது. யாரோ ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிபார்சுடனே தன்னையும் ஆள்சேர்பில் இணைத்துக் கொள்ளுமாறு கோர முடியும்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கின்ற சிபார்சின் அடிப்படையில் – கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து யாரை, எந்தப் பல்கலைக்கழகத்துக்கு பரிந்துரைப்பதென்பது உயர்கல்வி அமைச்சரின் அல்லது அமைச்சின் செயலாளரின் சிறப்புரிமையாக இருந்து வந்துள்ளது.
ஒரு வகையில் சொல்லப் போனால் இது ஓர் அரசியல் நியமனமேதான். ஆனாலும், கல்வி அமைச்சில் இருந்து கிடைக்கின்ற பட்டியல்களில் இருந்து, அந்தந்தப் பதவிகளுக்குத் தேவையான அடிப்படைத் தராதரங்களையும், ஆள்சேர்ப்பு நியமங்களுக்கு அமைவான வடிகட்டல்களையும் செய்யும் உரிமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு.
உதாராணமாக பல்கலைக்கழகங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படைத் தகுதியை எட்டாதவர்களின் பெயர்கள்கூட உயர்கல்வி அமைச்சின் பட்டியலில் இடம்பெறும், அவற்றிலிருந்து அடிப்படைத் தகுதி, வயதெல்லை உடையவர்களை வடிகட்டி, அவர்களுக்கான தெரிவுப் பரீட்சைகளை நடாத்தி அந்தப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி திறமை அடிப்படையில் ஆள்சேர்ப்புச் செய்யும் உரிமை அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு உண்டு.

இது வரை காலமும் அந்தந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களினால் சிபார்சு செய்யப்படுபவர்களின் பெயர்களை, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களுக்கே உயர்கல்வி அமைச்சு அனுப்பி வைத்த போதிலும் 2006 முதல் 2015 வரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும், அப்போதைய – மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானற்தா மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக “காட்டு தர்பார்” நடாத்தியிருந்தார்.

உயர்கல்வி அமைச்சில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னுடைய பட்டியல் மட்டுமே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். தப்பித் தவறி அவரையும் தாண்டி அமைச்சர் மட்டச் செல்வாக்கினால் வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வந்துவிட்டால் தன்னுடைய “கைப் பொம்மையாக” வைத்திருந்த துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் மூலமாக அந்தப் பட்டியலைத் தெரிவின் போது விலக்கி நூறு வீதம் தன்னுடைய பட்டியலின் மூலமே நியமனம் வழங்குவதை உறுதி செய்து கொண்டார்.

2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு – தேர்தல் விதிமுறைகளை மீறி, பல்கலைக்கழக நியமங்களையும் மீறி அடிப்படைத் தகுதிகூட இல்லாத பலரை இரவோடிரவாக பேருந்து வண்டிகளில் கொண்டுவந்து குவித்து அலுவலக நேரமல்லாமல் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை நேர்முகத் தேர்வை நடாத்தி நூற்றுக் கணக்கானவர்களுக்கு நியமனங்களை வழங்கச் செய்திருந்தார்.
அந்தப் பட்டியலுக்கூடாக வந்திருந்த பலர் இப்போது ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்து கொண்டு சுற்றறிக்கை ஊடான நியமனம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தக் காலப்பகுதியில், நியமனங்களில் திறமையான பலர் பல்கலைக்கழகத்துக்குப் பட்டியல் கிடைத்து, நேர்மையாகத் தேறிய போதிலும் அமைச்சரின் அழுத்தம் காரணமாகப் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்பட்ட பலர் இருந்த போதிலும், நாட்டிலிருந்த சூழ் நிலை காரணமாக அந்த நேரத்தில் அமைச்சருக்கெதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை.

2015, ஜனவரி 8 ஆம் திகதி மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்குப் பின், இவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, பல மேன்முறையீட்டாளர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டன.

அதன் பின் 2016, 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உயர்கல்வி அமைச்சின் ஊடாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு பட்டியல்களை அனுப்பியது நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் மட்டும்தான். முன்னைய ஆட்சியில் அமைச்சராக இருந்த டக்ளஸ் கூட இந்த ஆட்சியில் சித்தார்த்தன் ஊடாகத்தான் தனது பட்டியல்களை அனுப்பி வைத்திருந்தார்.
அதன் படி முகாமைத்துவ உதவியாளர்கள், வேலை உதவியாளர்கள், ஆய்வு கூட உதவியாளர் பதவிகளுக்கு 2016, 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தனின் பட்டியல் மூலம் மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டன. ஏனெனில் முன்னைய ஆட்சிக் காலத்தில் தங்கள் பட்டியல்கள் வராததனால் அலுத்துப் போன பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2016, 2017 களில் பெயர்களை அனுப்பவில்லை.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தனிடம் போனால் பல்கலைக்கழகத்தில் நியமனம் கிடைக்கும் என்று நம்பிய பலர் சித்தார்தனிடம் நேரடியாகவும், பல்கலைக்கழகத்தினுள் பணிபுரியும் அவரது “முகவர்கள்” ஊடாகவும் தமது பெயர்களை அனுப்பத் தொடங்கியதோடு, தாங்களே நேரடியாக உயர்கல்வி அமைச்சில் சென்று சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஒப்பத்தையும் பெற்றுச் சென்றனர்.
2018 இல் இவ்வாறு சென்றவர்களிடம் அமைச்சு அலுவலகத்தில் இந்த விடயத்தைக் கையாளும் செயலாளர்கள் நேரடியாகவே தமது விசனத்தை வெளிப்படுத்தியிருந்ததோடு, உங்களின் பெயர்கள் வர வேண்டுமானால் வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் வாங்கி அனுப்பினால் சாத்தியப்பாடுகள் அதிகமுண்டு என்றும் ஆலோசனை கூறியும் அனுப்பி வைத்தனர்.

உயர்கல்வி அமைச்சர்களாகக் காலத்துக்குக் காலம் பலர் மாறுகின்ற போதிலும், செயலாளர்கள் மாறாத காரணத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ. சரவணபவன், மாவை. சோ. சேனாதிராஜா, எம். ஏ. சுமந்திரன், சி. சிறிதரன் போன்றவர்கள் 2018 ஆம் ஆண்டில் மீண்டும் தங்களின் சிபார்சுப் பட்டியல்களைச் சமர்ப்பிக்கத் தொடங்கியதனால் 2018 முதல் யாழ். பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்த பட்டியல்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பரிந்துரைகள் முற்றாகவே தவிர்க்கப்பட்டிருந்தன.

துரதிஸ்டவசமாக இதுவரை காலமும் அரசியல் நியமனங்கள் என 876 சுற்றறிக்கையை எதிர்த்துவந்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளில் பலர், தமது பிள்ளைகளினதும், உறவினர்களினதும், பெயர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஊடாக 2018 முதல் அனுப்பத் தொடங்கியிருந்தனர்.
ஏற்கனவே அமைச்சு மட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் பட்டியலைத் தவிர்த்த அமைச்சு இம்முறையும் அதனைத் தொடர்ந்ததால், ஊழியர்சங்கத்துக்குத் “தேவையான” பலரது பெயர்கள் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. அதை நேரடியாகக் குறிப்பிட முடியாத இக்கட்டான நிலையில் ஊழியர் சங்கம் போர்த்திக் கொண்டதுதான் “தமிழ்த் தேசியப்” போர்வை.

பட்டியலில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று காரணம் காட்டி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றது. ஆனால், ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் எத்தனை முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டார்கள்? நேர்முகத் தேர்வுக்கு எத்தனை முஸ்லிம்கள் அழைக்கப்பட்டார்கள்? போன்ற விவரங்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம்.