நல்லூர் பிரதேச உணவகங்களில் பொலித்தீனை தடை செய்யக் கோரி பிரேரணை

0

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட உணவகங்கள் , திருமண மண்டபங்கள் போன்ற உணவு கையாளும் இடங்களில் பொலித்தீன் பாவனைகளை முற்றாக தடை செய்து அவற்றுக்கு மாற்றீடாக வாழையிலை பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என கோரி நல்லூர் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சி.கௌசலா பிரேரணை ஒன்றினை முன் மொழிந்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் உப்பு பொதியிடும் தொழிற்சாலை ஒன்றினை நிறுவி அங்கு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மற்றுமொரு பிரேரணையையும் அவர் முன் மொழிந்திருந்தார்.

நல்லூர் பிரதேச சபையின் 18ஆவது அமர்வு சபா மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார்.

“நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் முகமாக உப்பு பொதியிடும் தொழிற்சாலை ஒன்றினை நிறுவி அதில் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.

சபைக்கு சொந்தமான காணி அரியாலை பகுதியில் உள்ளது. அங்கு குறித்த தொழிற்சாலையை நிறுவி , ஆனையிறவு உப்பளத்தில் இருந்து உப்புக்களை பெற்று அங்கு பொதி செய்யவதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க முடியும்” என உறுப்பினர் சி.கௌசலா தெரிவித்தார்.

அதேவேளை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட உணவகங்கள் , திருமண மண்டபங்கள் போன்ற உணவு கையாளும் இடங்களில் பொலித்தீன் பாவனைகளை முற்றாக தடை செய்து அவற்றுக்கு மாற்றீடாக வாழையிலை பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என மற்றுமொரு பிரேரணையையும் அவர் முன் மொழிந்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

பொலித்தீன் தடை தொடர்பாக தற்போதே அதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவதன் ஊடாகவும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சபையினால் குறித்த இடங்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கும் போது , பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்தி அனுமதி பத்திரங்களை வழங்க வேண்டும்.

பொலித்தீன் பாவனைக்கு மாற்றீடாக வாழை இலை பயன்பாடு வருமாக இருப்பின் அதன் ஊடாக வாழை பயிர் செய்கை செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க முடியும் – என்றார்.