யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் ஆள்சேர்ப்பில் நடப்பது என்ன? ஒரு அலசல்! பாகம் 2

0

நரசிம்மன்

2018 ஆம் ஆண்டு உயர்கல்வி அமைச்சர்களாக விஜயதாச ராஜபக்சவும் கபீர் காசிமும் இருந்த போது இரண்டு தடவைகள் உயர்கல்வி அமைச்சிடமிருந்து 876 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக வெற்றிடங்களை நிரப்புவதற்கான பட்டியல்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் முதற் பட்டியலிலும் பெரும்பான்மையாக நடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனினால் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களே இடம்பெற்றிருந்தன, அடுத்த பட்டியலில் மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் அவர்களுடன் பணியாற்றிய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அந்த இருமுறைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், த. சித்தார்த்தன் ஆகியோருடைய சிபார்சுகள் முற்றாகக் கைவிடப்பட்டிருந்தன.

2018 இல் ஆள்சேர்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தடவைகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கடுமையான எதிப்பைக் காட்டியது. நேர்முகத் தேர்வுகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தினுள் வைக்கவிடாது சங்கம் தடுத்ததனால், சில நேர்முகத் தேர்வுகள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் நடாத்தப்பட்டது.

அந்தளவுக்கு, புதிய பணியாளர்களின் வரவை எதிர்த்த சங்கம், புதிய பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதும் அவர்களோடு அளவளாவி 134 பேரை யாழ்ப்பாணத்திலும், 36 பேரை வவுனியாவிலுமாக தங்கள் சங்கத்தின் அங்கத்தவர்களாக்கி தங்களை வலுப்படுத்திக் கொண்டது.

2019 ஆம் ஆண்டிலும் 876 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக வெற்றிடங்களை நிரப்புவதற்கான பட்டியல்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவைதான் இப்போது பெரும் அரசியலாகி குழப்பத்தில் போய் நிற்கிறது.

இவ்வளவு காலமும் பட்டியல் நியமனங்களை எதிர்த்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஊடாக சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் தங்கள் பிள்ளைகளையும், உறவுகளையும் பல்கலைக்கழக பணியில் இணைத்தவாறிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் சார்பில் பல்கலைக்கழகத்தினுள் செயற்படும் முகவர்களுக்கூடாக இம்முறையும் பல்கலைக்கழகத்தில் பயிலுநர்களாகப் பணிபுரியும் ஒரு சிலரின் பெயர்களோடு, ஊழியர் சங்கத்தின் அதி முக்கிய நிருவாகிகளின் பிள்ளைகளையும் சேர்த்து அனுப்பி வைத்தனர்.

துரதிஸ்டவசமாக இந்த முறை வந்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தனுடைய பரிந்துரைகள் எவையும் இடம்பெறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சோ. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், சி. சிறிதரன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டோரின் கணிசமான அளவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்கு பெரும்பகுதியும் அடங்கலாக வவுனியா, மன்னார் மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டோரின் பெயர்களும் சேர்த்து 424 பேரின் விவரங்கள் உயர்கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 115 பேரும், நூலகத் தகவல் உதவியாளர் பதவிக்கு 19 பேரும், நூலக உதவியாளர் தாழ் தரத்துக்கு 8 பேரும், அலுவலக வேலை உதவியாளர் பதவிக்கு 109 பேரும், கவனிப்பாளர் தாழ் தரத்துக்கு 4 பேரும், ஆய்வு கூட உதவியாளர் பதவிக்கு 150 பேரும், இறைச்சி வெட்டுபவர் பதவிக்கு ஒருவரும், பாதுகாப்பு ஊழியர் பதவிக்கு 15 பேரும், களஞ்சியக் காப்பாளர் பதவிக்கு 3 பேரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

இந்தப்பட்டியலில் எல்லாமுமாக 117 முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்களில் ஒருவர் கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருப்பவர்களல்ல.
கிடைத்த பட்டியலின் அடிப்படையில், முதற்சுற்று விவரங்கள் சேர்க்கப்பட்ட போது, அரைவாசிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அடிப்படைத் தகுதியின்மை காரணமாக தெரிவுப் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை. முகாமைத்துவ உதவியாளர் தெரிவுப் பரீட்சைக்கு ஓரிருவர் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை.

முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு கடந்த 03.09.2019 அன்று இடம்பெற்ற போது ஒரு முஸ்லிம்கூட அந்தப் பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை. ஆய்வு கூட உதவியாளர் பதவிக்கான பட்டியலிலும், வேலை உதவியாளர் பட்டியலிலும் முஸ்லிம்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அவர்களும் இவ்வாறே தகுதியிழக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.

அதனால், ஊழியர் சங்கம் போர்த்திக் கொண்ட தேசியம் என்ற போர்வை மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. உடனடியாக விழிப்படைந்த சங்கம் தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் தங்களுக்கும் இருக்கின்ற நெருக்கத்தைப் பயன்படுத்தி, பல வேறு வழிகளிலும் இம்முறை நியமன நடைமுறைகளை நிறுத்தி, புதிய பட்டியலை அமைச்சிலிருந்து பெறுவதற்காகப் பல பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்ளத் தொடங்கியது.

இதேவேளை, பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல தகுதி வாய்ந்த அதிகாரி இது விடயத்தில் ஊழியர் சங்கத்தின் தாளத்துக்கு ஆடினாலும், அவ்வப்போது உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமிருந்து கிடைக்கும் அறிவுறுத்தல்களைச் செயற்படுத்துவது போல பாசாங்கும் காட்டிக் கொள்வதாக பரவலாகப் பேசப்படுகிறது.

நியமன நடைமுறைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்குப் பணிக்கும் அதேவேளை தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அவற்றைத் தடுப்பதற்கான சங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் தட்டிக் கொடுத்தார் என்றும் சங்கத்தின் அழுத்தம் காரணமாக தனக்கும் இந்த ஆள்சேர்ப்பு நடைமுறைகள் குழப்பப்படுவதற்கும் தொடர்பில்லை என்பது போலவும், பேரவை முடிவினால் நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்டதாகக் காட்டுவதற்கும் சங்கப் பிரமுகர்களோடு ஒத்தூதுகிறார் என்ற கருத்து பல்கலைக்கழக சூழலில் நிலவுகின்றது.

இதனை எவ்வாறோ அறிந்து கொண்ட உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீண்டும் உருக் கொண்டு ஆடத் தொடங்கினார். கடும் தொனியில் நிர்வாகத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தெடங்கினார்.

இதனால் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கும் ஊழியர் சங்கம் இப்போது பாதிக்கப்பட்டோர் என்ற போர்வையில் ஒரு சில அப்பாவிகளை சுழற்சி முறையில் உணவு ஒறுப்பு போராட்டம் செய்வதற்குத் தயார்ப்படுத்தியிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், 06.09.2019 அன்று நிர்வாகத்துக்கு எதிராக சங்கம் பயன்படுத்திய அத்தனை துண்டுப் பதாதைகளும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோர் போராட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் என்பதால் அதை வைத்து அரசியல் செய்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரையும் ஊழியர் சங்கம் தூண்டிவிட்டிருக்கிறது.

உண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2006ஆம் ஆண்டு 876ஆம் இலக்க சுற்றறிக்கையின் படி, உயர்கல்வி அமைச்சில் இருந்து கிடைக்கின்ற பட்டியலில் இருந்தே ஆள்சேர்ப்பு நடைமுறைகளுக்கான அழைப்புகள் விடுக்கப்பட வேண்டும். அவ்வாறாயின் உயர் கல்வி அமைச்சின் பட்டியலில் பெயர் வராத ஒருவர் உயர் கல்வி அமைச்சில் தானே போய்க் கேட்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் உணவு ஒறுப்பில் இருந்து என்ன பயன்?

நிரந்தர ஊழியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டால், ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்றிடம் பணியாற்றும் இவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது? ஒப்பந்தக்கார நிறுவனம் இவர்களை தன்னுடைய வேறோர் பணியிடத்துக்கு மாற்றும். ஆனால் பல்கலைக்கழகத்தில் உரிய காலத்தில் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் விட்டால், அந்தப் பணியிடங்கள் காலா காலத்துக்கு காலியாகவே போய் விடுவதோடு எங்கள் சமூகத்தில் எத்தனையோ குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய நிரந்தர வேலை வாய்ப்பும் தவறிப் போய்விடும் வாய்ப்புகள் உண்டு.
சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here