இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

தனியார் வங்கியில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நால்வர் மறியலில் – முன்னாள் முகாமையாளர் தலைமறைவு

0

தனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் கவரிங் நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மூவர் என நால்வர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன், தலைமறைவாகியுள்ள முகாமையாளரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா பிறப்பித்தார்.

தனியார் வங்கியின் சங்கானைக் கிளையில் பணியாற்றிய முகாமையாளம் மற்றும் கடன் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், வாடிக்கையாளர்கள் மூவர் என ஐந்து பேர் இணைந்து தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை அடகுவைத்து முற்பணம் பெற்றிருந்தனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இந்த மோசடி தொடர்பில் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற நிலையில் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்த முகாமைத்துவம், மோசடி தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஐவருக்கு எதிராக முதல் அறிக்கையைத் தாக்கல் செய்தது. எனினும் மோசடி இடம்பெற்ற நீதிமன்ற நியாயாதிக்கம் மல்லாகம் நீதிமன்ற வலயம் என்பதால் வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும் நீதிமன்றின் உத்தரவில் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வங்கிக் கிளையின் முகாமையாளர் ரமணன் என்பவர் தலைமறைவாகிய நிலையில் உத்தியோகத்தர் மற்றும் 3 வாடிக்கையாளர்களையும் கைது செய்தனர். அவர்கள் நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று (செப்ரெம்பர் 20) வெள்ளிக்கிழமை முற்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேகநபர்கள் நால்வரையும் வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் தலைமறைவாகியுள்ள முன்னாள் முகாமையாளரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவையும் நீதிவான் பிறப்பித்தார்.

“வங்கியின் நிதியை மோசடி செய்த நால்வர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் உரிய பணத்தை மீளச் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்காததால் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் நகைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை” என்றவாறு வங்கியின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here