அதீத மதுபோதையும் திடீர் உயிரிழப்பும்

0
மருத்துவர் க . வாசுதேவா, MBBS,DLM, MD

அண்மையில் இரவில் நடந்த மது விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இளம் குடும்பத்தலைவர் ஒருவர் அடுத்த நாள் காலை தீடீரென்று உயிழப்பைத் தழுவிய செய்தி எல்லோருடைய மனதையும் ஒரு கணம் பதறவைத்தது. பலருக்கு ஏன் இவ்வாறான தீடீர் இறப்புகள் நிகழுகின்றன என்பதுபற்றி தெரியாது.
இப்பதிவில் அதிகளவு மதுபான பாவனை எவ்வாறு தீடீர் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றேன்.

 1. நாம் மதுபானம் அருந்தும் பொழுது அது எமது குருதியில் எதைல் ஆல்கஹாலின் அளவு படிப்படியாக அதிகரித்து செல்லும். இவ்வாறு செல்லும் பொழுது ஒவ்வொரு செறிவிலும் அது குறித்த நடத்தை கோலங்களினை மது அருத்துபவரில் ஏற்படுத்தும்.
  உதாரணமாக 50mg/dl என்ற அளவில் உள்ளபொழுது அது மது அருந்துபவரில் அதிகம் கதைக்கும் தன்மை, சுயநிலை மறந்த தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். இவ்வாறே படிப்படியாக அதிகரித்து 250mg/dl என்ற அளவினை அடையும் பொழுது மயக்கம் மற்றும் கோமா போன்றவற்றினை ஏற்படுத்தும். 300mg/dl என்ற அளவினை தாண்டும் பொழுது அது ஆல்கஹால் நஞ்சு ஆதலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.
 2. மதுபானமானது எமது உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களினை உண்டாக்கும். அவற்றில் முக்கியமானது உணவு விழுங்கும் ஆற்றலினை பாதித்தல் ஆகும்.
  இதன் காரணமாக அதிக மது அருந்திக்கொண்டு உணவு அருந்துபவர்களில் உண்ணும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம் அல்லது வாந்தி எடுக்கும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம். இவ்வாறு புரைக்கேறுவதினால் மது அருந்துபவர் திடீர் உயிரிழப்பை அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
 3. அருந்தும் மதுவின் அளவினையும் அவர்கள் அதற்கு எடுக்கும் கால இடைவெளியினையும் வைத்து மது அருந்துபவர்களினை அவர்களினை பல்வேறுவகைகளாகப் பிரிக்கலாம்.
  அவர்களின் ஒருவகையினர்தான் Binge drinker (heavy episodic drinker)இவர்கள் யார் என்றால் நாளாந்தம் மது அருந்தாமல் குறித்த சிலநாள்களில் மிக அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள்.
  இவர்களை வரைவிலக்கணப்படுத்த பல்வேறு வரைவிலக்கணங்கள் மருத்துவரீதியில் உண்டு.
  இவர்கள் இவ்வாறு அளவுக்கு அதிகமாக மது அருந்தி சில மணித்தியாலங்களில் அவர்களின் இருதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக மாறும் அதாவது சாதாரண மனிதன் ஒருவனுக்கு சராசரியாக நிமிடத்திற்கு 72 துடிப்புக்கள் என்று காணப்பட்ட இருதய துடிப்பு அதிகரித்து அதன் ரிதம் மாற்றமடையும். இதனால் மது அருந்தியவருக்கு மயக்கம், தலைச்சுற்று போன்றன ஏற்பட்டு திடீர் உயிரிழப்பு ஏற்படலாம்.
 4. மேலும்அதீத போதையில் மது அருந்தியவர் தன்னிலை மறந்து நீண்ட நேரம் மனித உடலின் நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழ் உள்ளவாறும் கால்ப்பகுதி மேலே உள்ளவாறும் தூங்குவார்கள்.
  அதாவது கட்டில் அல்லது கதிரையில் இருந்து நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழே விழுந்தநிலையில், இவ்வாறு இவர்கள் ஏறத்தாழ தலைகீழாக அதிக நேரம் தூங்கும் பொழுது அவர்களின் வயிற்றில் உள்ள அங்கங்கள் நெஞ்சு பகுதியினை அமுக்குவதினால் மூச்சுவிட சிரமப்பட்டு இறப்பார்கள். இவ்வாறான இறப்புக்கள் சட்டமருத்துவத்தில் positional asphyxia deaths என்றழைக்கப்படும்.
 1. அதீத மதுபோதையில் உள்ளவர்கள் வீதி விபத்துகளில் சிக்கியும், உயரமான கட்டடங்களில் இருந்து தவறிவீழ்ந்தும், நீரில் மூழ்கியும் திடீர் உயிரிழப்புக்களைச் சந்தித்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
 2. மது அருந்த தொடங்கும் பொழுது நண்பர்களாக அருந்த தொடங்கியவர்கள், சிறிது நேரம் செல்ல போதையில் ஒருவரை ஒருவர் அடித்துகொலை செய்த சந்தர்ப்பங்களும் உண்டு.
 3. ஒருவர் நீண்டகாலமாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருக்கும்பொழுது அவர்களின் உடலில் பல்வேறுபட்ட நோய்நிலைகள் ஏற்படலாம். குறிப்பாக ஈரல் பழுதடைதல், உணவு விழுங்கும் களத்தில் உள்ள குருதிக் குழாய்களில் ஏற்படும் வரிக்கோசு, இதயத்தின் செயற்பாடு குறைதல் போன்றன ஏற்படலாம். மேற்குறித்த நோய்நிலைகள் திடீர் உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்.
 4. பொதுவாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருப்பவர்கள் தற்கொலைக்கு முன்பாக அதிக மது அருந்திய நிலையிலேயே தற்கொலை செய்துகொள்வார்கள்.
  இவ்வாறு அதீத மதுபோதை பல்வேறுபட்ட வழிகளில் திடீர் உயிரிழப்புக்களை விளைவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here