கோத்தாபயவின் குடியுரிமையை சவாலுக்கு உள்படுத்தும் மனு புதனன்று விசாரணை

0

கோத்தாபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும் நீதிப் பேராணை மனுவை விசாரிக்க நீதியரசர்கள் மூவர் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த அமர்வு முன்னிலையில் மனு நாளை மறுதினம் (ஒக்ரோபர் 2) புதன்கிழமை முற்பகல் 9.30 மணி மறுநாள் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கோத்தாபய ராஜபக்சவுக்கு இலங்கை குடியுரிமை எப்போதாவது சட்டபூர்வமாக வழங்கப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கோத்தாபய ராஜபக்ச  ஒரு இலங்பை குடிமகன் என்று கூறுவதைத் தடுக்கும் வகையில், இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும், மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ச இலங்கையின்  குடிமகன் அல்ல என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என புரவெசி பலய அமைப்பின் அமைப்பாளர், காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.

“எங்களை ஆள விரும்புவோர், சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதற்கு முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியானவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றும் வியாங்கொட தெரிவித்தார்.