புலனாய்வுப் பிரிவின் அறிக்கையால் துணைவேந்தராக வந்த பேரா.விக்னேஸ்வரன் அதனாலேயே பதவியும் நீக்கப்பட்டார்

0

தேசிய புலனாய்வுப் பிரிவின் நற்சான்றிதழுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், அதே தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையினால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் மாபெரும் தமிழ் விழா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்றது.

அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து தமிழமுதம் – தமிழ் விழாவும் தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில் இந்த விழாவை நடத்தியிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நிகழ்வில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வாசகம் நினைவுப் பரிசிலில் பொறிக்கப்பட்டிருந்தது என்று தேசிய புலனாய்வுப் பிரிவு அரச தலைவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையை உள்ளிட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைநின்றார் என்ற காரணத்தை முன்வைத்தே பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், துணைவேந்தர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டார் என்று சட்ட மா அதிபரால் உயர் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் மே 5ஆம் திகதி அறிவித்திருந்தார்.

எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை கடந்த மே மாதம் தாக்கல் செய்தார்.

தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கந்தசாமியின் நியமனத்தை இடைநிறுத்தி வைக்கவும் இடைக்காலக் கட்டளை ஒன்றை வழங்குமாறு அந்த மனுவில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் சார்பில் சட்டவாளர் நிறுவனம் ஒன்று இந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றில் கடந்த மே மாதம் சமர்ப்பித்தனர்.

மனுவில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பிடப்பட்டனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, எஸ்.துரைராஜா, இ.ஏ.ஜி.ஆர். அமரசேகர ஆகிய மூவர் கொண்ட அமர்வு முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையானார். எதிர்மனுதாரர்கள் சார்பில் மேலதிக மன்றாடியார் அதிபதி முன்னிலையானார்.

பேராசிரியர் விக்னேஸ்வரனை துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கியமைக்கான காரணங்களை சட்ட மா அதிபர் திணைக்களம் சத்தியக்கூற்று ஒன்றின் மூலம் உயர் நீதிமன்றுக்கு முன்வைத்தது.
அதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தமிழமுதம் விழாவில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் பயன்படுத்தப்ட்டதாகவும் அதற்கு துணைவேந்தர் அனுமதியளித்ததன் மூலம் அரசியலமைப்பை மீறிவிட்டார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், பொங்குதமிழ் நினைவாலயம் அமைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு அனுமதியளித்ததன் மூலம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணை நின்றதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தனது சத்தியக்கூற்றில் குறிப்பிட்டு துணைவேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் விக்னேஸ்வரனை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு சட்டரீதியானது என்று வெளிப்படுத்தியது.

பொங்குதமிழ் நினைவாலயம் அமைத்தமை உள்ளிட்ட செயற்பாடுகளை புறந்தள்ளி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வாசகம் பிரிவினையைத் தூண்டுவதாகவும் அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், பேராசிரியர் விக்னேஸ்வரனின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றின் இந்தக் கட்டளை இனிவரும் காலங்களில் வேறுபல நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்பது சட்டவாளர்களின் கருத்தாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவின் போது பல்கலைக்கழக பேரவையின் வாக்களிப்பை அடுத்து பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜா முதலாவதாகவும் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் இராண்டவதாகவும் பெயர் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும் முதலாவதாக இருந்த பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜா விலக்கப்பட்டு இரண்டாவது இடத்திலிருந்து பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்துக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு வழங்கிய அறிக்கையில் தனக்கே முதலிடம் வழங்கப்பட்டதாக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றுக்கு அப்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரை பதவிக் கொண்டு வந்த தேசிய புலனாய்வுப் பிரிவு பதவியிலிருந்து நீக்குவதற்கும் காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here