யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு

0

யாழ்ப்பாணத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுணுக்கு ஆயிரத்து 550 ரூபா அதிகரித்து ஒரு பவுண் 66 ஆயிரத்து 650 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

24 கரட் தூய தங்கத்தின் விலை கடந்த ஜனவரியில் 64 ஆயிரம் ரூபா என்ற அளவிலேயே இருந்தது. இந்நிலையில் பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்கா -சீனா இடையிலான வர்த்தக போர், வளைகுடா நாடுகளில் நிலவிய பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை படிப்படியாக அதிகரித்தது.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்றாம் திகதி தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 68 ஆயிரம் ரூபா என்று இருந்த நிலையில் , திடீரென அந்த மாத இறுதியில் 74 ஆயிரம் ரூபாவை தொட்டது. இதனால் திருமணத்திற்கு நகை சேர்க்க விரும்பியோர், திருமணத்திற்கு நகை வாங்க விரும்பியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

72 ஆயிரத்தை தாண்டியது
இந்நிலையில் தூய தங்கத்தின் விலை படிப்படியாக குறைவடைந்து 71 ஆயிரம் ரூபா அளவிலேயே இரண்டு தினத்திற்கு முன்பு வரை வந்தது. இந்நிலையில் மீண்டும் தங்கம் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து 72 ஆயிரத்து 700 ரூபாவை எட்டியுள்ளது.

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
அமெரிக்காவிலோ அல்லது சர்வதேச அளவிலோ பாதிப்புகள் ஏற்பட்டால் பங்குசந்தைகளில் முதலீடு செய்யும் பலரும் திடீரென பாதுகாப்புக்காக தங்கத்தின் முதலீடு செய்வது வாடிக்கையாகும். அதன் காரணமாகவே தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறது. தங்கம் விலை அதிகரிப்பால் இலங்கையில் தங்க விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.