வீழ்ந்தது தென்னாபிரிக்கா

0

தென்னாபிரிக்கா – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இந்திய அணி.

கடந்த 2ஆம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 502/7 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அகர்வால் 215 ஓட்டங்களையும், ரோகித் 176 ஓட்டங்களையும், ஜடேயா 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் சார்பில் மகாராஜ் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 431 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. எல்கர் 160 ஓட்டங்களையும், குயின்டன் டி ஹொக் 111 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸ்வின் 7 விக்கெட்டுக்களையும், ஜடேயா 2 விக்கெட்டுக்களையும், இசாந் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

71 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸூக்காகக் களமிறங்கிய இந்திய அணி 323/4 என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்தியது. ரோகித் மீண்டும் சதம் கடந்தார். அவர் 127 ஓட்டங்களையும், புஜாரா 81 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மகாராஜ் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

395 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய நாள் முடிவில் 11/1 என்ற நிலையில் இருந்தது. இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 191 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களால் வீழ்ந்தது.

பந்துவீச்சில் சமி 5 விக்கெட்டுக்களையும், ஜடேயா 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.