யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு 9 பேர் விண்ணப்பம் – பேரா. விக்னேஸ்வரனும் கையளிப்பு

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நேற்று 7ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், துணைவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்களாவர்.

ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உயிரியல் மற்றும் மரபணுத்துறையின் இணைப் பேராசிரியரான சாம். தியாகலிங்கம், ஐக்கிய இராச்சியத்தின் சவுத்ஹம்டன் பல்கலைக்கழக இலத்திரனியல், கணினி விஞ்ஞானத்துறைப் பேராசிரியரான மகேசன் நிரஞ்சன் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியிலிருந்த சமயம் 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய பதவி நீக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக கணித புள்ளிவிபரவியல் துறைப் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன்,

கடந்த முறை இடம்பெற்ற துணைவேந்தர் தெரிவின் போது, பேரவையினால் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும், ஜனாதிபதியின் தெரிவில் இடம்பிடிக்கத் தவறிய யாழ். பல்கலைக்கழக கணித புள்ளிவிபரவியல் துறைப் பேராசிரியர் சி. சிறி சற்குணராஜா,

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும், மருத்துவ நிபுணருமாகிய எஸ். ரவிராஜ்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்பிகள் பீட பீடாதிபதியும், விவசாயப் பேராசிரியருமான கே. மிகுந்தன்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் ரி. வேல்நம்பி,

யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப் பீடத்தின் ஆங்கில மொழிக் கற்கைகள் துறையைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க முன்னாள் தலைவருமான கலாநிதி இ. இராசகுமாரன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஊழியரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவருமான எஸ். கே. தனேந்திரன் ஆகியோரும் துணைவேந்தர் பதவிக்காகத் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.