ஈஸ்டர் தாக்குதல்; பூஜித், ஹேமசிறியின் பிணை நீக்கம் – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி

0
juridical concept with hammer and judge, selective focus on metal part,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்துச் செய்து கட்டளை வழங்கியது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணை அனுமதிக் கட்டளையை ஆட்சேபித்து சட்ட மா அதிபர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதே  கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு இன்று (ஒக்.9) புதன்கிழமை கட்டளை வழங்கியது.

இதன்மூலம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத்த் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்தது.

தேவாலயங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, முன்னரே வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் விடயத்தில் உயர் அதிகாரிகளாக இருந்த இவர்கள், நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

எனினும் அவர்கள் இருவரையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் கடந்த ஜூன் 9ஆம் திகதி பிணையில் விடுவித்தது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நிறைவு செய்யாத நிலையில் நீதிவான் வழங்கிய பிணை அனுமதிக் கட்டளையை நீக்குமாறு கோரி சட்டா மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

சட்ட மா அதிபரின் விண்ணப்பத்துக்கு அனுமதியளித்த கொழும்பு மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றில் பிணை அனுமதிக் கட்டளையை இரத்துச் செய்து கட்டளை வழங்கியது.