ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் – தனது முடிவை அறிவித்தது முன்னணி


நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற முடிவை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என நினைக்கும் வல்லரசு சக்திகள் சமஷ்டித்  தீர்வு பெற்றுத்தரல் போர்க்குற்றத்துக்கான பொறுப்புக்கூறலை நடாத்துதல் ஆகிய இரு விடயங்களுக்கான உத்தரவாத்த்தைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முதன்மை வேட்பாளர்கள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களுடைய கருத்துக்களை பார்த்தால் முக்கியமான மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் நிலைப்பாடு பொதுவானதாகவே உள்ளது.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற விடயமும் அதற்கு மேலதிகமாக முதன்மையான இரண்டு கட்சியும் இலங்கை என்ற நாடு ஒற்றையாட்சி நாடாக மட்டும்தான் இருக்கமுடியும். அந்த ஒற்றையாட்சித் தன்மையை பலப்படுத்துவதுதான் தமது நோக்கம் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளன.

தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை போர் அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டை காப்பாற்றிய ஒரு விடயமாகவும் அதில் போரிட்ட இராணுவமும் முப்படையினரும் போர் வீரர்கள் என்றுமே பிரதான கட்சிகள் இரண்டினதும் நிலைப்பாடாகும்.

போர் வீரர்களை எக்காரணம் கொண்டும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கு தயார் இல்லை என்றும் அவர்களுடைய கௌரவத்தை இன்னும் உறுதிப்படுத்துவதுதான் தங்கள் நோக்கம் என்ற விடயத்தையும் மிகத் தெளிவாக பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்ககளைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை.

அரசியல் தீர்வு, அதில் சிறப்பாக ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தமிழரின் இறைமை அடிப்படையில் ஒரு சமஷ்டித் தீர்வுதான் எங்களுக்குத் தேவையான விடயம்.

அதனால் மட்டுதே தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே இடம்பெற்றிருந்த இன அழிப்பு – முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் அத்தகைய சம்வங்கள் தொடராமல் இருப்பதற்கு நாங்கள் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை செய்தே ஆகவேண்டும்.

அவ்வாறு செய்வதே எதிர்காலத்தில் கடந்த காலத்தைப்போன்று தமிழ் மக்களை அழிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்.

இவை இரண்டும்தான் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று நடக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும்
இதில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. ஆனால் இவை எதனையும் கருத்திற்கொள்ளாது சிங்கள வேட்பாளர்கள் நேர் எதிரான செயற்பாடுகளை தங்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்திய மாநாடுகளில் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள்.

அதுமட்டுமன்றி எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் இனங்கப்போவதில்லை எனவும் எவருடனும் எந்தவிதத்திலும் ஒப்பந்தங்கள் எழுத்து மூலம் செய்யத் தயார் இல்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இத்தகைய நிலையில் தமிழ் மக்களுக்கு யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாங்கள் தமிழ் மக்களுடைய நலன்கள் என்று பார்ப்பதானால் எங்களுக்கு இந்தத் தேர்தலில் எவ்விதமான அக்கறையும் இருக்கமுடியாது. எங்களுக்குரிய தேர்தல் இதுவல்ல என்பதுதான் இன்றைக்குள்ள ஜதார்த்தம். எனவே  எங்களுடைய அமைப்பின் நிலைப்பாடு இந்தத் தேர்தலை புறக்கணிக்கும் முடிவாகும்.

இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை.ஆனால் புறக்கணிப்பு என்ற விடயம்  கடும் போட்டி ஏற்படுகின்ற வேட்பாளர்கள் மத்தியில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற முடிவாக இருக்கலாம். தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றியடைய முடியாத நிலமை  என்ற முடிவை தேர்தல் புறக்கணிப்பால் உருவாக்கமுடியும்.

அப்படிப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையாக இருந்தால் எங்களுடைய புறக்கணிப்பில் மாற்றங்களை செய்வதாக இருந்தால் நாங்கள் எத்தகைய அடிப்படையில்  மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்பதை எங்களுடன் இணங்குகின்ற தரப்புகளுடன் தெளிவுபடுத்துவதற்கு நாங்கள் எழுத்துமூலம்  குறிப்பாக தழிழ் மக்களுக்கு அடிப்படைதேவையாகவுள்ள தீர்வு பெறுப்புக்கூறல், அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு ஆக்கிரமிப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தல் போன்ற விடயங்களை எழுத்துமூலமாக தயாரித்துள்ளோம்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் வேட்பாளர்கள் முக்கியமில்லை. இவர்கள் நம்பக்கூடியவர்கள் இல்லை, தேர்தலில் போட்டியிடுபவர்கள் என்பதால் அவர்கள் எதனையும் கூறலாம்.

ஆனால் வேட்பாளர்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய சர்வதேச சக்திகள் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவைப் பெறுத்தவரையில் இதற்குப் பின்னாலுள்ள மேற்கத்திய சக்திகள் கோத்தபாய ராஜபக்சவுக்குப்பின்னாலுள்ள சினா போன்ற தரப்புக்கள் எங்களைப் பொறுத்தவரையில் வல்லரசுகள்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஆகவே தமிழ் மக்களுடைய வாக்குகளை தேவை என்று நினைக்கின்ற வல்லரசுகள்தான் நாங்கள் முன் வைக்கின்ற நிபந்தனையில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இத்தகைய செயற்பாடு இல்லாமல் எங்கள் அமைப்பு எங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம்.

இதேவேளை  ஐக்கிய தேசியக் கட்சியை விரும்புகின்றவர்கள் கோத்தாபய ராஜபக்சவின் பின்னாலுள்ள சீனாத் தரப்புக்களை தோற்றகடிக்க விரும்புகின்ற தரப்புகளோ நாங்கள் புறக்கணிப்பு என அறிவித்தால் கோத்தாபய ராஜபக்சவை வெல்லவைப்பதுதான் நோக்கம் என்ற கருத்துருவாக்கம் செய்ய முற்படுகின்றார்கள்.

போரை நடாத்தி தமிழ் மக்களை அழித்த கோத்தாபய ராஜபக்சவிற்கு நாங்கள் ஆதரவு என்று கடந்த 10 வருடமாக சொல்லிவந்த பொய்ப்பரப்புரையைக் கூறுவதற்கு முற்படுகின்றார்கள்.

எங்களுடை மக்கள் ஆழமாக யோசிக்கவேண்டும். தமிழ் ம்ககளைப் பொறுத்தவரையில் இரு வேட்பாளர்கள் மத்தியில் வேறுபாடு இருக்காது. தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுக்களை நடாத்திக் கொண்டிருக்கின்றபோது போர் நிறுத்த உடன்பாட கைக்சாத்திட்டவேளை இலங்கையில் முப்படைகள் மூன்று மடங்கு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பலப்படுத்தல் மேற்கிந்திய நாடுகளினால்தான் ஐக்கியதேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில்தான் இது நடந்தது.

ஒரு புறம் போர்நிறுத்த உடன்படிக்கை மறுபுறம் முப்படையினரின் பலப்படுத்தல். இதேகட்சிதான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவைப் பிரித்தது.

போரை வெற்றிகரமாக கொண்டு சென்றதும் இந்தத்தரப்பே. இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

போர் முடிந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத்பென்சேகா போட்டியிட்டார்கள். அன்று சரத் பென்சேகாவுக்கு ஆதரவளித்தவர்கள் இன்று கோத்தாபயவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறுகின்றார்கள்-  எங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறுகின்றவர்கள்.

கோத்தாபயவுக்குக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். இதனைத் தெ ளிவுபடுத்தாது குற்றம் சாட்டுவது மக்களை தவறாக வழிநடாத்தி திசை திருப்புவதற்காக கூறுகின்ற போலிக்குற்றச்சாட்டாகவே இதை நாம் பார்க்கின்றோம் – என்றார்.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் .ஒன்றினைந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு செயற்படுவது தொடர்பில் உங்கள் கட்சி சென்றுவருவது தொடர்பில் கேட்டபோது,

ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவுதான் பெரும்பான்மையானர்வகளால் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. எனினும் எத்தகைய இணக்கப்பாடு தேவை என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் எழுத்து மூலமான ஆவனங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்த நிலையில் எமது யோசனைகள் அடங்கிய விவரங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். ஏனையவர்கள் கொடுத்த விடயங்கள் எமக்குத் தரப்படவில்லை.

அவ்வாறு வழங்கப்படக்கூடாது என்ற கருத்துக்களே முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த ஒழிவு மறைவு ஏனென்றே தெரியாதுள்ளது. தொடர்ந்து சந்திப்புக்கள் உள்ளமையினால் இது தொடர்பில் அதிகம் கூறுவது நாகரிகம் இல்லை – என்றார்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!