மூத்த சட்டதரணியின் உயிரிழப்புக்கு மருத்துவ கவனயீனமே காரணம் – பிள்ளைகள் சாடல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை பின்னான மருத்துவ கவனயீனத்தால்  மூத்த சட்டத்தரணி உயிரிழந்துள்ளார் என அவரது பிள்ளைகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

உணவு செலுத்துவதற்காக வயிற்றில் குழாய் பொருத்தப்பட்ட போதும் அதனால் செலுத்தப்பட்ட உணவு இரைப்பைக்குச் செல்லாது வெளியில் சென்றமையால் ஏற்பாக்கியே மூத்த சட்டத்தரணி உயிரிழந்தார் என்று கொழும்பில் செய்யப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னான சட்ட மருத்துவ அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே தமது தந்தையின் உயிரிழப்பில் மருத்துவ கவனயீனமே காரணம் என்று பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி தும்பளையை சேர்ந்த மூத்த சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற நீதிபதியுமான சிவசாமி பாலகிருஷ்ணன் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பில் பிள்ளைகள் தெரிவித்ததாவது;

கிளிநொச்சி பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த மூத்த சட்டத்தரணி,  கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மூன்று வார காலங்களில் அவர் உடல் நலம் தேறி வந்தார்.

அந்நிலையில் அவருக்கு உணவு வழங்குவற்காக வயிற்றில் சத்திர சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் நிலை மோசமாகி வந்துள்ளது.

அது தொடர்பில்  தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது , குழாய் பொருத்தினதால் அப்படிதான் இருக்கும் என அசண்டையீனமாக பதில் அளித்தனர்.

அதன் பின்னர் குழாய் ஊடாக உணவு வழங்கப்பட்ட போது , வயிற்றுப்பகுதியில் வீக்கம் காணப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் சத்திர சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது , செமிபாட்டு பிரச்சனையால் ஏற்பட்ட வீக்கம், சத்திர சிகிச்சையில் தவறில்லை. நோயாளி வழமை போன்றே உள்ளார் என பதிலளித்துள்ளனர்.

தாதியர்கள், மருத்துவர்கள் எம்மால் கூறியவை எதனையும் கவனத்தில் எடுக்காத நிலையில் தொடர்ந்து குழாய் மூலம் உணவு வழங்கப்பட்ட நிலையில் மூன்றாம் நாள் நோயாளியின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை மீண்டும் சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு சென்று சத்திர சிகிச்சை மூலம் உணவு வழங்குவதற்கு பொருத்தப்பட்ட குழாயை அகற்றியிருந்தனர்.

குழாய் அகற்றப்பட்டமை தொடர்பில் மருத்துவர்களிடம்  வினாவிய போது, முதலில் மழுப்பலான பதில்களையே வழங்கினர். பின்னர் பிள்ளைகள் மருத்துவ அறிக்கையை பார்க்க வேண்டும் என கூறி அதனை பார்த்த போதே , குழாய் தவறுதலாக பொருத்தப்பட்டமையால் ,குழாய் ஊடாக வழங்கப்பட்ட உணவுகள் வயிற்று பகுதிக்குள் சென்றமை தொடர்பில் அறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் செயலிழந்துள்ளமையாலையே  உடல் நலம் தேறி வந்த எமது தந்தை உடல் நலம்  மீள மோசமானது என்பதனை அறிந்து கொண்டோர்.

அந்நிலையில் கடந்த 06ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்டத்தரணி உயிரிழந்தார்.

அதனை அடுத்து எமது தந்தையின் உடல்கூற்று பரிசோதனையை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்வதில் எமக்கு நம்பிக்கையீனம் காணப்பட்டமையை அடுத்து . நீதவானின் அனுமதியை பெற்று  தந்தையின் உடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து பெற்று கொழும்புக்கு கொண்டு சென்று அங்கு உடல் கூற்று பரிசோதனையை மேற்கொண்டோம்.

இந்நிலையில் எமது தந்தையின் பூதவுடல் அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , நாளைய தினம் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தீர்த்தங்குள பிள்ளையார் கோவிலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் – என்றனர்.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!