ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கைது

0
யானையின் தந்தத்திலிருந்து சட்டவிரோதமாகப் பெறப்படும் கஜமுத்துக்கள்

ஒரு கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான 3 கஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன் இருவர் சாய்ந்தமருதில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன்  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை(ஒக். 8) இரவு 8 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி(வயது-30) மீரா முகைதீன் முகமட் சலீம்(வயது-39) ஆகியோரே 3 கஜமுத்துக்களுடன் கைது செய்யப்பட்டனர்.

இச்சுற்றிவளைப்பின் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில்   மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள்களான நவாஸ்(44403) கீர்த்தனன்(6873) அமலதாஸ்(73593) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட் கஜமுத்துக்கள் ரூபா 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இருவரும்  நீதிமன்றின் உத்தரவில் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.