“ஜப்பான் மக்களுக்காகப் பிராத்திப்போம்” – தாண்டவம் ஆடிய ஹகிபிஸ் புயல்

0

ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய ஹகிபிஸ் புயல் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 216 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் ஹோன்ஷு தீவை தாக்கிய இந்த புயல் டோக்கியோ நகரின் தென்மேற்கில் உள்ள இஸு தீபகற்பம் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த புயலின் எதிரொலியாக இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்த புயல் தொடர்பான எச்சரிக்கையாக சுமார் 80 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நிலச்சரிவில் சிக்கி இந்த புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

பேரிடர்களால் அவ்வப்போது சூறையாடப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு பலமான சூறாவளிப் புயல் ஒன்று ஜப்பானை தாக்கியது. இதில் சுமார் 30 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. கடந்த மாதம் கூட ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்குப் பகுதியை ஒரு புயல் தாக்கியது.
இந்நிலையில் மீண்டும் ஒரு சூறாவளி ஜப்பானை தாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இதற்கு காரணம் ஜப்பானில் வானம் ‘பிங்க்’ நிறமாக மாறியதாக சிலர் வெளியிட்டுள்ள ஒளிப்படங்கள்தான். இந்தப் ஒளிப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆயிரத்து 600 விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புயலை ஜப்பானியர்கள் 1958ஆம் ஆண்டு வந்த ‘கனோகவா’ சூறாவளிப் புயலுடன் ஒப்பிடுகின்றனர். இந்தப் புயல் வீசியபோது சுமார் ஆயிரத்து 200 பேர் ஜப்பானில் இறந்தனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

அப்போது வானம் இதேபோன்று ‘பிங்க்’ நிறத்தில் மாறியதாக மக்களிடையே பேசப்பட்டது. இதனால் தற்போது அதேபோன்று பாதிப்பு வருமோ என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், ஹகிபிஸ் புயலானது ஜப்பானை கடுமையாக தாக்கியுள்ளது. புயல் காற்றுடன் மழையும் கொட்டி தீர்த்தது. புயல் காற்றில் பல பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டன.

கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, #PrayForJapan என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஜப்பான் நாட்டிற்காக பிரார்த்தனை செய்யுமாறு பலரும் அதில் வலியுறுத்தியுள்ளனர்.