500 தமிழ் குடும்பங்களுக்கு சாவகச்சேரி, மண்கும்பானில் வீட்டுத் திட்டம் வழங்க பிரதமர் உறுதி – யாழ். மாநகர சபை உறுப்பினர் நிலாம் தெரிவிப்பு

0
????????????????????????????????????

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கு 250 வீடுகளை அமைக்க அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கிய நிலையில் சாவகச்சேரி மற்றும் மண்கும்பான் – வெள்ளைக்கடற்கரையில் 500 தமிழ் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் கிடைக்கப்பெற்றது.

கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மிக நிதானமாக சில விடங்களை எனக்கு உத்தரவாக வழங்கி இருந்தார். அதற்கிணங்க எனது முயற்சியால் சுமார் ஒன்றரைக் கோடி (15 மில்லியன்) ரூபா நிதியில் யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வீதியில் நாவாந்துறையில் காணிகள் கொள்வனவு செய்யப்பட்டன.

இந்தக் காணிகளுக்கான நிதி செல்வந்தர்களால் வழங்கப்பட்டன. அந்தக் காணிகளில் இன்று இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை வீடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்.ஒவ்வொரு வீடும் 600 சதுர அடிகளை கொண்டிருக்கும்.

யாழ்.மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்த முஸ்லிம்களில் 61 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் 2 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 குடும்பங்கள் வரை கூட்டுக் குடும்பங்களாக உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது 250 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுவது பெரும் ஆறுதலாக உள்ளது.அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது.

அமைக்கப்படவுள்ள வீடுகளின் மாதிரி

.2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 9 வருடங்களாக எமது மக்களின் மீள்குடிமர்வுச் செயற்பாடுகளில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன். இதற்கு எமது மக்கள் சாட்சியாக இருக்கின்றார்கள்.
தற்போது எமது கட்சித்தலைவர் றிசாட் பதியுதீன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த அகதிகளை குடியேற்றல் என்ற அமைச்சினை பெற்று இந்த அமைச்சு ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துள்ளார்.

அத்துடன், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் வீட்டுத் திட்டம் பெற்றுக் கொடுப்பதில் நின்றுவிடாது சொந்தக் காணிகள் அற்று தென்மராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களில் 500 குடும்பங்களுக்கு சாவகச்சேரி மற்றும் மண்கும்பான் – வெள்ளைக்கடற்கரையில் (சாட்டி) ஆகிய இரு இடங்களில் தலா 250 வீடுகளை அமைக்க அனுமதியைப் பெற்றுள்ளேன்.

கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இதற்கான அனுமதியைப் பெற்றேன். சாவகச்சேரி மற்றும் மண்கும்பானில் காணிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியையும் செல்வந்தர்கள் வழங்க இணங்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டு இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படும் என்று நம்புகின்றேன் – என்றார்.