ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நீக்கவேண்டும் – பொது ஆவணத்தில் சேர்க்க முன்னணி வலியுறுத்து

0

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் ஆட்சியில் அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு இடைக்கால அறிக்கை நீக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கும் பொது ஆவணத்தில் இடம்பெறவேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

எனினும் அதற்கு தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இணக்கம் தெரிவிக்க மறுத்ததால் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தமிழ் கட்சிகளை பொது இணக்கப்பாட்டுக் கொண்டுவந்து பொது ஆவணத்தில் கையொப்பம் வைக்கும் கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேபொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம், கிழக்குபல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியங்களின் முயற்சியின் பயனாக நீண்டகாலத்தின் பின் 6 தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் உள்பட கட்சிப் பிரமுகர்கள் பலர் ஒரே மேசையில் சந்தித்தனர்.

யாழ் . பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலுள்ள “ப்றைட் இன்” விடுதியில் இன்று இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் ஆட்சியில் அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சியையே குறித்து நிற்பதால் அதனை நீக்கவேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைக்கும் பொது ஆவணத்தில் இடம்பெறவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுதியாக நின்றது.

எனினும் அதனை முன்வைப்பதற்கு தமிழ் அரசுக் கட்சி உள்ளிட்டவை இணக்கம் தெரிவிக்கவில்லை.

அதனால் இன்றைய கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல் நாளை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.