கருணாவை கொலை செய்யும் திட்டத்துடனேயே முன்னாள் போராளி சினைப்பருடன் மூதூர் பயணமானார் – விசாரணைகளில் தகவல் என்கிறது பொலிஸ் தரப்பு

0

திருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியை பிரான்சிலிருந்து ஒருவர் இயக்கியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியிலிருந்து சினைப்பர் துப்பாக்கியுடன் கருணாவை கொலை செய்யும் நோக்குடன் அவர் மூதூருக்குச் சென்றவேளையிலேயே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் தகவல்கள் தெரிவித்ததாவது:
திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த ரொபின் என்ற முன்னாள் போராளி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் திருகோணமலையில் தங்கியிருந்த விடுதி அறையை இராணுவத்தினர் சோதனையிட்ட போது, அங்கு சினைப்பர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.

அவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணைகளில் அவர் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வருவதாக தெரியவந்தது. அதுதொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் அவரது வீட்டுக்கு கிளிநொச்சி பொலிஸார் சென்றுள்ளனர். அங்கு முன்னாள் போராளியின் சகோதரியும் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளனர். முன்னாள் போராளிக்கு குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.

வீட்டைச் சோதனையிட்ட போது, வீட்டின் மேல்தளத்தில் (பிளேட்டில்) உரைப்பையில் கட்டியவாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
3 கைத்துப்பாக்கிகள், ஒரு ரி56 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி ரவைகள் -45, ரி56 துப்பாக்கி ரவைகள் -150, 5 கைக்குண்டுகள், மடிகணினி ஒன்று, 4 அலைபேசிகள், எம்.கே.எம்.ஜி ரவைகள்- 07, வெடிப்பி வயர், வெடிப்பிகள் – 4, ஜிபிஎஸ் – 1, பற்றறி சார்ஜர் -1, தானியக்கி கருவிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட ரிசேட்டுகள் -3 ஆகியன மீட்கப்பட்டன.

அதுதொடர்பில் முன்னாள் போராளியின் சகோதரியும் மனைவியும் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

“இயற்றாளையைச் சேர்ந்த நான், 2017ஆம் ஆண்டு ரொபினை காதலித்து திருமணம் செய்து எனது பெற்றோர் – உறவினர்களைப் பிரிந்து கிளிநொச்சிக்கு வந்தேன். ரொபின் டோவாவுக்கு தொழில் நிமிர்த்தம் சென்று வந்தார்.

திரும்பி வரும் போது பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட ரிசேட்டுகளை எடுத்துவந்தார். அதற்கு மேல் அவரது நடவடிக்கைகள் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது.

அவர் வவுனியாவுக்கு வேலைக்குச் செல்வதாகவே என்னிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நேற்று பொலிஸார் தெரிவித்த போதே அவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியும்” என்று ரொபினின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தில் இருந்த போது ரொபின் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கும் முகவராக சம்பளம் பெற்றுப் பணியாற்றியுள்ளார் என்று தெரியவருகிறது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னரே அவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

முன்னாள் போராளியின் அலைபேசித் தரவுகள் ஆராயப்பட்ட போது அவர் பிரான்சில் உள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கருணாவை கொலை செய்வதற்காகவே அவர் மூதூருக்குப் பயணமாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு அவருக்கு 2 லட்சம் ரூபா பணம் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முன்னாள் போராளியின் சகோதரியையும் மனைவியையும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற பின் அவர்கள் இருவரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.